நாவலப்பிட்டி நகர சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 08 பேரை எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நாவலப்பிட்டி நகர சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 08 பேர் நேற்று (30) மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
வட்டவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளும், ஹட்டன் பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவினரும் இணைந்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01) முன்னிலைப்படுத்தியபோதே, குறித்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றில் பொலிசாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அவர்களை அவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சிறைச்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சூதாட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபா பணம், மதுபான போத்தல்கள், நகர சபை தலைவரின் சொகுசு வாகனம் மற்றும் அவரின் சகாக்கள் பயணித்த வாகனம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
(ஹட்டன் நிருபர் ஜி.கே. கிருஷாந்தன்)
No comments:
Post a Comment