“ரணில் தலைமைத்துவத்திலிருந்து விலகிச் சென்றாலும் ஐக்கிய தேசியக்கட்சி முன்னோக்கிச் செல்வதை எவராலும் தடுக்க முடியாது” - News View

About Us

About Us

Breaking

Friday, May 29, 2020

“ரணில் தலைமைத்துவத்திலிருந்து விலகிச் சென்றாலும் ஐக்கிய தேசியக்கட்சி முன்னோக்கிச் செல்வதை எவராலும் தடுக்க முடியாது”

(செ.தேன்மொழி) 

ஐக்கிய தேசிய கட்சி என்பது ரணிலோ, சஜித்தோ அல்லது கபிர் ஹசிமோ அல்ல. இது கிராமபுறங்களைச் சேர்ந்த ஆதரவாளர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் கட்சியாகும். எனவே தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்திலிருந்து விலகிச் சென்றாலும் ஐக்கிய தேசிய கட்சி முன்னோக்கிச் செல்வதை யாராளும் தடுக்க முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, எமது கட்சியிலிருந்து விலகிச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை எமது கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோன்று சுயாதீனமாகவும் , வேறு கட்சிகளுடனும் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானம் எடுத்துள்ள எமது கட்சியில் உறுப்புரிமை பெற்றிருந்தவர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்காக செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளதுடன், அதற்கு நாங்கள் இணக்கம் தெரிவித்தை அடுத்து அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 99 பேர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர். இதனால் கட்சியில் காணப்பட்ட இடைவெளியை நிரப்புவதற்காக செயற்குழு புதிய நியமனங்களையும் வழங்கியுள்ளது. அதற்கமைய கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டதுடன், உப தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும், தேசிய அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டனர்.

தற்போது எமது கட்சியின் தலைவர் மற்றும் பிரதித் தலைவருக்கிடையில் இடைவெளி இருக்கின்றது. அது தொடர்பில் எதிர்வரும் தினங்களில் தீர்மானம் எடுப்போம். இதேவேளை கட்சியின் பொருளாளராக சட்டத்தரணி பிஸ்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதன்போது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு எப்போதுமே தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான எண்ணம் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் மக்களின் நலனை பாதுகாப்பதே எமக்கு அவசியமாகும். அதனால் மக்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதுடன், மக்களின் உரிமைகளை மீறும் வகையிலும், அவர்களை பாதிக்கும் வகையிலும் அரசாங்கம் தீர்மானங்கள் எடுத்தால், அதனை எதிர்த்து குரல் எழுப்பவும் பின்வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை கட்சியின் செயற்குழுவுக்கு புதிதாக எட்டு பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி என்பது ரணில் விக்கிரமசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ அல்லது கபீர் ஹசிமோ கிடையாது. ஐக்கிய தேசிய கட்சி என்பது நாமே. அன்றிலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாத்து வருவது கிராமங்களைச் சேர்ந்த எமது ஆதரவாளர்களே. இது வெறுமன கட்சியல்ல பலவாய்ந்த கட்சியாகும்.

இன்று இதன் தலைமைத்துவத்தை விட்டு ரணில் விக்ரமசிங்க விலகிச் சென்றாலும் புதிய தலைவருடன் கட்சி முன்னேறிச் செல்வதை யாராளும் தடுக்க முடியாது. தற்போது கட்சியின் ஆதரவாளர்கள் யாரைச் சுற்றி இருந்தாலும் அவர்கள் இறுதியில் யானைக்கே வாக்களித்து செல்வார்கள். செயற்குழு இவர்களை நீக்க தீர்மானித்துள்ள போதிலும், இவர்கள் விரும்பினால் மீண்டும் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment