(இராஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலில் வெற்றியை இலக்காக கொண்டு நாடுதழுவிய ரீதியில் கூட்டங்களை நடத்த வேண்டிய தேவை பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. இலத்திரனியல் நவீன சாதனம் ஊடாக தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். பொதுத் தேர்தலை எதிர்கொள்ள முடியாத நிலையிலேயே எதிர்த்தரப்பினர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை, பொதுத் தேர்தலுக்கான திகதி குறிப்பு ஆகியவற்றுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே பொதுத் தேர்தலை பிற்போட நீதிமன்றத்தை நாடியதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தை ஒருபோதும் மறக்க முடியாது. தேசிய பாதுகாப்புக்கு பொதுஜன பெரமுன முன்னுரிமை வழங்கும் என்ற நம்பிக்கையிலேயே பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.
எக்காரணிகளுக்காகவும் மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் அலட்சியப்படுத்தாது. பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் பிரசார கூட்டங்கள் இடம்பெறும். இதனால் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அச்சம் கொள்கிறது என்றார்.
No comments:
Post a Comment