வவுனியா மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த கடற்படை சிப்பாயின் குடும்பத்தினர் 8 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வவுனியா பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது. வவுனியா மகாகச்சகொடியைச் சேர்ந்த குறித்த கடற்படை வீரரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த 9 பேருக்குமான பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகள் சேர்க்கும் பணி நேற்று வரை இடம்பெற்று அதன் முடிவுகள் வெளிவந்திருந்தது. அதனடிப்படையில் கடற்படை சிப்பாயின் குடும்ப உறவினர்களான 8 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்று பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஒருவரின் முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்ட 25 புதிய கொரோனா தொற்றாளர்களில் 18 பேர் கடற்படை வீரர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐவர் கடற்படை வீரர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 690 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளாகி மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 172 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்பட்டால் நாளொன்றுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆறாயிரம் ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment