கொரோனாவை குணப்படுத்த மருத்துவ சோதனை செய்யப்பட்ட ரெம்டிசிவிர் (Remdesivir) என்ற புதிய மருந்தை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு, வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டிசிவர் பலனளிப்பதால், அவற்றை அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
நவம்பர் மாதம் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், கடந்த 5 மாதங்களில் உலகம் முழுக்க பரவி இதுவரை 34 இலட்சம் பேரை பாதித்துள்ளது. அதில் 10 லட்சத்து 81 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 2 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று எபோலோவுக்காக உருவாக்கப்பட்ட அன்டி வைரஸ் மருந்தை, சில மாற்றங்களுடன் கொரோனா வைரசுக்கு எதிராக சோதனை செய்தது.
மூன்று கட்ட சோதனை முடிவில் ரெம்டிசிவர் என்ற அம்மருந்து நல்ல பலனளிப்பதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் அதிசய பலனை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், அவசர சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு உதவுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் ஆயிரம் பேர்களிடம் நடத்திய சோதனை முடிவுகளை வெளியிட்டது. அதில், சுவாச கோளாறு உள்ளவர்கள் இம்மருந்தால் விரைவில் குணமடைகிறார்கள். மற்ற மருந்துகளை விட, குணப்படுத்தும் நேரத்தை 31 சதவீதம் இது விரைவாக்குவதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதனை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் அவசர சிகிச்சைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்த இரத்த ஒக்சிசன் அளவு உடையவர்கள், ஒக்சிசன் சிகிச்சை தேவைப்படுபவர்கள், செயற்கை சுவாச கருவி (ventilator) உதவி தேவைப்படுபவர்களுக்கு, இம்மருந்தை செலுத்த அனுமதியளித்துள்ளது.
No comments:
Post a Comment