(இராஜதுரை ஹஷான்)
அங்கீகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கலை வலுவற்றதாக்கவே எதிர்தரப்பினர் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்ட நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். எக்காரணிகளுக்காகவும் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்படாது. அத்துடன் ஐ.ஒ.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இவர்களுக்கு ஆதரவாக செயற்படும் பங்காளி கட்சி ஆகியோர் அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளார்கள். இதன் காரணமாகவே இன்று அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றினைந்து செயற்படுகின்றார்கள். எதிர்தரப்பினர் பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பித்த வேட்பு மனுவில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் முரண்பாடே இம்முறை பொதுத் தேர்தலில் அவர்களுக்கு பாரிய பின்னடைவினை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே அங்கீகரிக்கப்பட்ட வேட்புமனுவை வலுவற்றதாக்க எதிர்த்தரப்பினர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.
ஐ.ஒ.சி நிறுவனம் முறையற்ற விதத்தில் தற்போது எரிபொருளின் விலையினை அதிகரித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இந்தியாவின் ஐ.ஒ.சி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையில் இந்த நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுத்தது. தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதற்கு அரசாங்கத்தினால் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது.
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இன்று எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.ஒ.சி நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்வதை முழுமையாக புறக்கணிக்க வேண்டும். என்றார்.
No comments:
Post a Comment