எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தா எல்-சிசியை கேலி செய்து, ஒரு காணொளிக் காட்சியை தாயரித்தமைக்காக விசாரணைகளின்றி இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்நாட்டு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
எகிப்தின், கெய்ரோவிலுள்ள டோரா என்ற சிறைச்சாலை வளாகத்திலேயே ஷேடி ஹபாஷ் என்ற குறித்த திரைப்பட தயாரிப்பாளர் உயிரழந்துள்ளதாக, அவரது சட்டத்தரணி அஹமட் எல்-குவாகா சனிக்கிழமை தெரிவித்தார்.
ஷேடி ஹபாஷின் மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்பட தெரிவிக்கப்படவில்லை. எனினும் ஹபாஷின் உடல் நிலை பல நாட்களாக பாதிப்படைந்திருந்தாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வெள்ளிக்கிழமை மாலை சிறைக்கு திரும்பினார். அதனைத் தொடர்ந்து அன்றிரவே அவர் உயிரிழந்து விட்டதாகவும் குவாகா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இவரது மரணம் குறித்து எகிப்தின் சிறைச்சாலை நடவடிக்கைகளை பார்வையிடும் உள்துறை அமைச்சகத்திடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஷேடி ஹபாஷ் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிஸ் படைகளினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment