நல்லாட்சிக்காக போராடிய ராஜித சிறையில், நல்லாட்சியின் ஜனாதிபதி, பிரதமர் ராஜபக்ஷவின் கூட்டணியில் - வேதனையளிக்கிறது என்கிறார் சம்பிக்க - News View

About Us

About Us

Breaking

Friday, May 15, 2020

நல்லாட்சிக்காக போராடிய ராஜித சிறையில், நல்லாட்சியின் ஜனாதிபதி, பிரதமர் ராஜபக்ஷவின் கூட்டணியில் - வேதனையளிக்கிறது என்கிறார் சம்பிக்க

(ஆர்.யசி) 

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கவும், ராஜபக்ஷக்களின் ஆட்சியை வீழ்த்தி நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் முன்னிலையில் நின்று போராடிய ராஜித சேனாரத்ன கைதாகியுள்ளார். ஆனால் இவரது போராட்டம் மூலமாக ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு வந்தவர்கள் இன்று ராஜபக்ஷக்களின் கூட்டணியில் உள்ளனர். இதை நினைத்தால் வேதனையளிக்கிறது என தேசிய மக்கள் சக்கிதியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மேலும் கூறுகையில், இந்நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் ரீதியிலான பழிவாங்கல் மிகவும் மோசமாக இடம்பெற்று வருகின்றது. 

2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்த ராஜித சேனாரத்ன முன்வந்தமை, மற்றும் ராஜபக்ஷக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வந்ததன் காரணமாகவே அவரை பழிவாங்கியுள்ளனர். 

அதேபோல் கடந்த நல்லாட்சியில் ராஜித சேனாரத்னவின் போராட்டம் மூலமாக ஜனாதிபதி பிரதமர் பதவிக்கு வந்தவர்கள் இன்று ராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்குதாரர்களாக மாறியுள்ளதை நினைத்து நாம் வேதனையடைகின்றோம். 

எவ்வாறு இருப்பினும் அவரை விடுவிக்க நீதிமன்றத்தை நாடும் அதேவேளையில் அவர் எமக்கு கற்பித்துக் கொடுத்த மக்கள் போராட்டத்தின் மூலமாக அவரை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குவோம். இது ராஜிதவிற்கு விழுந்த அடி அல்ல, ஜனநாயகத்தை உருவாக்க முயற்சிக்கும் அனைவருக்கு எதிராகவும் விழுந்த அடி என்றே நாம் இதனை கருதுகின்றோம். 

எமது தரப்பினர் சிறையில் அடைக்கப்படும் அதேவேளையில், மிக் விமான குற்றவாளிகள், அவென்கார்ட் ஊழல்வாதிகள் கொவிட்-19 காலத்தில் இரகசியமாக விடுவிக்கப்பட்டனர். மத்திய வங்கி ஊழல்வாதிகள் என கூறியவர்கள் எவரையும் தண்டிக்கவில்லை. ஆனால் எமது ஆட்சியில் இந்த ஊழலுடன் தொடர்புபட்ட நபர்களை சிறையில் அடைத்தோம் என்பதை மறந்துவிட வேண்டாம். 

ஐக்கிய தேசிய கட்சி இன்றும் அரசாங்கத்துடன் இணையும் நோக்கத்தில் உள்ளனர் என்பது அவர்களின் மூலமாகவே தெரிகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பலர் இன்று எம்முடன் இணைந்துள்ளனர். எனவே உண்மையான எதிர்க்கட்சி யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

No comments:

Post a Comment