(ந.தனுஜா)
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுதல் தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதி அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டும், அல்லது இது குறித்து உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோர வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக வலியுறுத்தியிருக்கிறார்.
பொதுத் தேர்தல் இன்னமும் நடத்தப்படாத நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து பிமல் ரத்நாயக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது புதிய பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய தினமும் கடந்திருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் எதுவுமில்லை என்றாகிறது. இது நாட்டின் அரசியலமைப்பு குறித்தும், அரசாங்கம் குறித்தும் ஓர் ஸ்திரமற்ற தளம்பல் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே இத்தகையதொரு தருணத்தில் ஜனாதிபதி அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டும், அல்லது இது குறித்து உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோர வேண்டும்.
No comments:
Post a Comment