பரீட்சைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்தால் மாணவர்களுக்கு பெறும் நெருக்கடியாக அமையும் - மக்கள் விடுதலை முன்னணி - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

பரீட்சைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்தால் மாணவர்களுக்கு பெறும் நெருக்கடியாக அமையும் - மக்கள் விடுதலை முன்னணி

(எம்.மனோசித்ரா) 

இணையத்தளம் மூலம் கற்றல் நடவடிக்கைகளை தொடருவதற்கான வசதிகள் அனைத்து மாணவர்களுக்கும் இல்லை. எனவே பாடசாலைகள் மூடப்பட்டுள்ள காலத்தையும் இணைத்து கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து அதன் பின்னர் தேசிய பரீட்சைகளை நடத்துவது குறித்து அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலை உள்ளிட்ட ஏனைய அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 68 நாட்கள் பூர்த்தியடைந்துள்ளன. 

இந்நிலையில் கடந்த வாரம் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தற்போது பாடசாலைகளை திறக்கும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தார். இந்த தீர்மானத்தை நாமும் வரவேற்கின்றோம். காரணம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒரு நபர் கூட நாட்டில் இல்லை என்ற நிலைமை திரும்பும் வரையில் பாடசாலைகளை திறக்காமலிருப்பதே சிறந்ததாகும். 

எனினும் சுமார் இரு மாதங்களுக்கும் அதிகமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் இவ்வருடம் 8 ஆம் மாதம் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் வருட இறுதியில் சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே இந்த மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார். 

அத்தோடு கல்வித்துறை அதிகாரிகள் புத்திஜீவிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து முறையான தீர்வொன்றை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால் கல்வி அமைச்சினால் இதுவரையில் அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுப்படவில்லை. 

கொரோனா தாக்கத்தின் காரணமாக முதலாம் தவணை பரீட்சை இடம்பெறவில்லை. தனியார் வகுப்புக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நகரங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறான நிலைமையில் பாடத்திட்டங்களை குறைத்து பரீட்சைக்கான வினாத்தாள்களை தயாரிப்பது குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவ்வாறு செய்வது பொறுத்தமானதல்ல. எனவே பாடசாலை மூடப்பட்டுள்ள காலத்தையும் இணைத்து அதன் பின்னர் பரீட்சைகளை நடத்துவதற்கு முயற்சிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். 

அதனை விடுத்து இணையத்தளம் ஊடாக (Online மூலம்) பாடத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ஆகஸ்ட் மாதத்தில் முழுமையாக பரீட்சைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்தால் அது மாணவர்களுக்கு பெறும் நெருக்கடியாக அமையும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad