எரிபொருளிலிருந்து கிடைக்கம் இலாபத்தில் மக்களுக்கு சலுகையை பெற்றுக் கொடுங்கள் - கயந்த கருணாதிலக்க - News View

Breaking

Post Top Ad

Thursday, May 21, 2020

எரிபொருளிலிருந்து கிடைக்கம் இலாபத்தில் மக்களுக்கு சலுகையை பெற்றுக் கொடுங்கள் - கயந்த கருணாதிலக்க

(செ.தேன்மொழி) 

எரிபொருளுக்காக அறவிடப்பட்டு வரும் வரியிலிருந்து கிடைக்கப் பெறும் இலாபத்தைக் கொண்டு மக்களுக்கு சலுகையை பெற்றுக் கொடுப்பதுடன் மின்சார கட்டணத்திற்கான செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்று மக்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, பலமிருந்த போது அறிவுடன் செயற்பட்ட அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் என்ற வகையில் தற்போதைய அரசாங்கத்தையும் அவ்வாறு செயற்படுமாறு கோரிக்கை விடுத்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலினால் அரசாங்கம் மாத்திரமன்றி நாட்டு மக்களும் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலகச் சந்தையில் எரிபொருள் விலை பெருமளவில் வீழ்சியடைந்திருப்பதுடன், அதற்கான சலுகைகள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். 

நாங்கள் ஆட்சியிலிருந்து விலகும் போது ஒரு பீப்பாய் எண்ணை விலை 68 டொலராக இருந்தது. தற்போது அது 27 டொலர் என்ற மட்டத்திற்கு குறைவடைந்துள்ளது. அரசாங்கம் அதனை மறைத்து நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றது. எரிபொருளுக்கான சலுகையை பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டு, பருப்பு மற்றும் டின்மீனின் விலையை குறைப்பதாக குறிப்பிட்டு வர்தமானியை வெளியிட்டிருந்தனர் தற்போது அதனையும் நீக்கியுள்ளனர். 

எந்தவொரு அரசாங்கத்தின் மீதும் முன்வைக்கப்படும் விமர்சனம்தான், 'பலமிருக்கும் போது புத்தியில்லை, புத்தியிருக்கும் போது பலமில்லை' என்று , நாங்கள் எரிபொருளுக்கான சலுகையை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாற்கான காரணம் எமக்கு பலமிருந்தபோது, எமது புத்தியை பயன்படுத்தி எரிபொருளுக்கான சலுகையை மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருந்தோம் என்பதை நினைவு கூறுவதற்காகவே. 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மாத்திரமின்றி மீனவர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நாளாந்தம் ஊதியம் பெருபவர்களின் நலனுக்காக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். 

இதேவேளை உலக சந்தையில் எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 68 டொலராக இருந்த போதிலும் , 13 ரூபாவே வரியாக அறவிட்டோம். ஆனால் தற்போது ஒரு பீப்பாய் எரிபொருள் 28 டொலராக இருக்கின்ற போதிலும், 55 ரூபாய் வரி அறவிடப்படுகின்றது. இந்நிலையில் எமது ஆட்சிகாலத்தில் 68 டொலருக்கு சுப்பர் டீசல் பெற்றுக் கொள்ளப்பட்ட போதிலும், 36 ரூபாவே வரியாக அறவிட்டோம். தற்போது சுப்பர் டீசலின் கொள்வனவு விலை 28 டொலராக இருக்கின்ற போதிலும் 86 ரூபாய் வரி அறவிடப்படுகின்றது. 

இந்நிலையில் வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறையைச் சேர்ந்த பலரது தொழில் இல்லாமல் போயுள்ளதுடன், சிலருக்கு தொழில் இல்லாது போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மற்றும் சம்பளம் முழுமையாக கிடைக்கப் பெறாமலும், அரை சம்பளமே கிடைக்கப் பெற்றவர்களும் இருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் எரிபொருளிலிருந்து கிடைக்கப் பெறும் இலாபத்தை, மின் கட்டணம் மற்று நீர் கட்டணத்தை செலுத்துவதற்காக நிதி திரட்டுவது தொடர்பில் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு சலுகையை பெற்றுக் கொடுப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad