மக்களுக்கான நிவாரணம் அரசியல் பிரசாரம் என்றால் உடனடியாக தேர்தலை நடத்துங்கள் - அமைச்சர் பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, May 21, 2020

மக்களுக்கான நிவாரணம் அரசியல் பிரசாரம் என்றால் உடனடியாக தேர்தலை நடத்துங்கள் - அமைச்சர் பந்துல குணவர்தன

(ஆர்.யசி) 

கொவிட்-19 நெருக்கடியில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மாத்திரம் 500 கோடி ரூபாய்களுக்கு அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்திடம் நிதி இல்லாது போனாலும் கூட வங்கிக் கடன்களை பெற்றேனும் இந்த நிவாரணங்களை வழங்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

மக்களுக்கு வழங்கும் நிவாரண வேலைத்திட்டம் அரசியல் பிரசாரம் என தேர்தல்கள் ஆணைக்குழு கருதுகின்றது என்றால் உடனடியாக தேர்தலை நடத்துங்கள், அதன் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துடன் மக்களுக்கு சேவை செய்கின்றோம் எனவும் அவர் கூறினார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியார் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன மேலும் கூறுகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 வரையில் நாட்டில் காணப்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் என்பன இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது. இப்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கமானது இலங்கையில் பொருளாதார ரீதியிலும், அபிவிருத்தி சார்ந்த விடயங்களுடனும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் கொவிட்-19 தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 250-300 கோடி ரூபாய்களை வழங்கியுள்ளோம். அதேபோல் இலங்கையில் 25 இலட்சத்து 30 ஆயிரத்து 288 சமுர்த்தி பயனாளர்களுக்காக 12 ஆயிரத்து 651 மில்லியன் ரூபாய்கள் வழங்கும் உடன்பாட்டிற்கு அரசாங்கம் வந்துள்ளது. இதில் ஓய்வூதியக்காரர்களும் உள்ளடங்குவர். 

சமுர்த்தி பயனாளர்கள் அல்லாது 19 இலட்சத்து 24 ஆயிரத்து 967 பேருக்கு 9624 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் அப்பால் விசேட தேவைகளை கருத்தில் கொண்டு 6 இலட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டது. இம்மாதம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் 51 இலட்சத்து 44 ஆயிரத்து 46 பேருக்காக 257 கோடி ரூபாய்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. 

ஆகவே மொத்தத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்காக ஐந்தாயிரம் கோடி ரூபாய்கள் மக்களுக்காக செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாதம் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கும் அப்பால் மேலும் 1600 கோடி ரூபாய்களை வழங்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆகவே இவ்வாறு வழங்கப்படும் எந்த நிதியும் தனிப்பட்ட பணம் அல்ல. இவை மக்களின் வரிப்பணம். ஆகவே மக்களின் பணத்தில் மக்களுக்கான நிவாரணங்களை வழங்கி நாடு எப்போது வழமைக்கு திரும்புகின்றதோ அதன் பின்னர் மீண்டும் அரசாங்கம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். 

ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் வரையில் வங்கிக் கடன்களை பெற்றேனும் மக்களுக்கான நிவாரணங்களை வழங்கவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எமக்கு இன்னொரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அதில் கூறப்பட்டுள்ள காரணியானது, அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தை தேர்தல் பிரசாரமாக முன்னெடுப்பதாகவும், கட்சிகளின் செயலாளர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

ஆகவே ஜூன் மாதமும் இவ்வாறான நிவாரண தொகை வழங்கப்படுவது குறித்து சிந்திக்குமாறும், அவ்வாறு அடுத்த மாதம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றால் அதனை அரசியல் பிரசாரமாக மாற்ற வேண்டாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். 

எவ்வாறு இருப்பினும் மக்களுக்கு இப்போது மிகப்பெரிய நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ளதாள் ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கமும் அரசியல் கட்சி, மதம், இனம் என பாகுபாடு பார்க்காது அனைவருக்கும் நிவாரணங்களை வழங்க தீர்மானம் எடுத்துள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது என்றால் யாரும் நிராகரிக்கப்படுவதாக இருந்தாலும் உடனடியாக எமக்கு அறிவிக்க முடியும். 

நாம் செய்வது தேர்தல் பிரசாரம் என்றால் உடனடியாக தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தால் தேர்தல் முடிந்தவுடன் கூட்டப்படும் முதல் பாராளுமன்ற அமர்விலேயே கொண்டுவரும் வரவு செலவு திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முழுமையான நிவாரண வேலைத்திட்டம் ஒன்றினை வழங்க ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் என்றார். 

No comments:

Post a Comment