ராஜபக்சக்களால் அரசியல் பழிவாங்கலுக்குட்படுத்தும் விதிமுறைகளிலிருந்து வெளிவர முடியாது : பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா - News View

About Us

About Us

Breaking

Friday, May 15, 2020

ராஜபக்சக்களால் அரசியல் பழிவாங்கலுக்குட்படுத்தும் விதிமுறைகளிலிருந்து வெளிவர முடியாது : பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா

(எம்.மனோசித்ரா) 

தமக்கு தேவையானவற்றை செய்யாதவர்களை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தும் விதிமுறைகளிலிருந்து ராஜபக்சக்களால் ஒருபோதும் வெளிவரமுடியாது எனத் தெரிவித்த பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கலுக்காக மாத்திரமேயாகும் என்றும் குறிப்பிட்டார். 

மேலும், ராஜபக்ச ஆட்சி காலத்தில் அவர்கள் தரப்பில் காணப்பட்ட பிரபல அரசியல்வாதியான ராஜித சேனாரத்ன இவ்வாறு அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை என்றும் சரத் பொன்சேக்கா தெரிவித்தார். 

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்று கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த தாக்குதல்களின் பின்னணியில் பிரபலங்கள் பலர் உள்ளனர் என்றும் அரசியல்வாதிகள் பலர் உள்ளனர் என்றும் அவர்கள் யார் என்பது பற்றி வெளிப்படுத்துவதாகவும் கூறினர். 

இதில் பல விடயங்கள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. அவர்களால் இலக்கு வைக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாமல் போயுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறி ஒரு சிலர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த அரசாங்கமே தற்போதும் காணப்பட்டிருந்தால் இதேபோன்று மேலும் ஓரிருவர் கைது செய்யப்பட்டிருக்கக் கூடும். 

மேலும் மத்திய வங்கி பிணை முறி மோசடி பற்றியும் கூறப்பட்டது. கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற இரு வாரங்களுக்குள் பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதாகக் கூறினார். தற்போது இவை அனைத்தையும் ஒரு புறம் ஒதுக்கிவிட்டு முதலை கதையை கையிலெடுத்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. 

இந்த விடயம் நாட்டின் எந்தவொரு நபருக்கும் முக்கியமானதல்ல. நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பிரச்சினையோ அல்லது நிகழ்காலத்திற்கு பாதகத்தைத் தோற்றுவிக்கும் பிரச்சினையோ அல்ல. இதனை அரசியல் பழிவாங்கலாகவே நான் எண்ணுகின்றேன். ராஜித சேனாரத்ன என்பவர் இதற்கு முன்னர் ராஜபக்ச ஆட்சியிலுள்ள பிரபல அரசியல்வாதியொருவராவார். நான் சிறை உணவு உண்ட போது அந்த பக்கம் இருந்த பிரபல அரசியல்வாதி அவராவார். அவர் இவ்வாறு அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படுவார் என்று நாம் யாரும் எண்ணவில்லை. 

ராஜித சேனாரத்னவைப் போன்று ஷானி அபேசேகர போன்றோரும் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நான் கைது செய்யப்பட்ட தினம் என்னுடைய மனைவியை சீ.ஐ.டிக்கு அழைத்துச் சென்று அன்றைய தினம் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை விசாரணைக்குட்படுத்தியவர் ஷானி அபேசேகர ஆவார். அது போன்ற சந்தர்ப்பங்களில் அப்போதைய அரசாங்கத்திற்கு அவர் சிறந்தவராகத் தெரிந்தார். ஆனால் தற்போது அவர்கள் தவறு செய்தபோது அவற்றை விசாரிப்பதால் ஷானி அகேசேகர போன்றோருக்கு புலிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சுமத்துகின்றனர். 

இவற்றிலிருந்து இவர்களுக்கு தேவையானவற்றை செய்யாவிட்டால் இவ்வாறானவர்கள் அரசியல் ரீதியாக பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவர் என்பது தெளிவாகிறது. கடந்த காலத்தில் நாம் சிறையிலடைக்கப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணமாகும். அந்த விதிமுறைகளிலிருந்து ராஜபக்சக்களுக்கு வெளிவர முடியாது. அவ்வாறான மனசாட்சி ராஜபக்சக்களிடத்தில் தோன்றாது என்பது இதன் மூலம் நிரூபனமாகிறது என்றார்.

No comments:

Post a Comment