(செ.தேன்மொழி)
வைரஸ் பரவலை தடுப்பதற்காக செயலணி அமைத்துள்ளதாக குறிப்பிட்டு அரச சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்து போல் பயன்படுத்தும் மோசடிகரமான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அரசியலமைப்பை மீறா ஜனநாயக ஆட்சியை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசியலமைப்புக்கு அமைவாக செயற்படும் ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து முறையான சட்டத்திட்டங்களுக்கமைய முன்னெடுக்கும் ஆட்சிக்கே வரவேற்பும் இருக்கின்றது. இதனாலேயே ஐக்கிய மக்கள் சக்தி அலரி மாளிகைக்கு செல்வதை புறக்கணித்துள்ளது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்ட முடியாது என்று உறுதியாக கூறிவருகின்ற நிலையில், அதற்கு ஆறுதலளிக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஸபக்ஷ அலரி மாளிகைக்கு வருமாறு கோரிக்கை முன்வைப்பதாகவே தோன்றுகின்றது. அங்கு செல்வதால் அரசியலமைப்புக்கு புறம்பாக முன்னெடுக்கப்படும் ஆட்சிக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவே அமையும்.
இதேவேளை நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் பருப்பு மற்றும் டின் மீன்களுக்கான நிர்ணய விலையை நீக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபைக்கு எவ்வாறு நிர்ணய விலையை மாற்றுவதற்கு அதிகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. நுகர்வோர்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டிய அதிகார சபை அதன் பொறுப்பை மீறி செயற்படுகின்றது.
பால்மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காலகட்டத்தில் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்காமல் விலை அதிகரிப்பை மேற்கொள்வதால் மக்களுக்கே பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
வைரஸ் பரவலின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் துறை மற்றும் அரச நிர்வாக துறையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பின்னர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்திடம் முறையான செயற்பாடுகள் ஏதாவது காணப்படுகின்றதா? இந்த விடயம் தொடர்பில் சிந்தனை செய்யாமல், நிதி தொடர்பிலான முகாமைத்துவத்தை தமது சகோதரரின் கையில் ஒப்படைத்து விட்டு நிதி மோசடியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அரச சொத்தை தமது சொத்தாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டு முயைறான ஆட்சியை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். ஆட்சி பலத்தை தக்கவைத்துக் கொள்பவது தொடர்பில் சிந்தனைச் செய்யாது மக்களின் நலன்கருதிய ஆட்சியை முன்னெடுங்கள் என்றார்.
No comments:
Post a Comment