கொழும்பு மக்கள் அச்சமடையத் தேவையில்லை : நிலைமை பூரண கட்டுப்பாட்டில் : கொரோனா பரவல் அபாயம் 3 இடங்களுக்குள் முடக்கம் - விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 3, 2020

கொழும்பு மக்கள் அச்சமடையத் தேவையில்லை : நிலைமை பூரண கட்டுப்பாட்டில் : கொரோனா பரவல் அபாயம் 3 இடங்களுக்குள் முடக்கம் - விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி

(எம்.எப்.எம்.பஸீர்) 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட தலை நகர் கொழும்பின் நிலைமை தற்போது பூரண கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும், அது தொடர்பில் வீண் அச்சம் தேவை இல்லை எனவும் கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில், எதிர்வரும் 11 ஆம் திகதி தலை நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அரச, தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அவ்வாறான பின்னணியில் கொழும்பின் தற்போதைய நிலை குறித்து, மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனியிடம் தகவல் கோரிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது, விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி மேலும் தெரிவிக்கையில், 'கொழும்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வரும் தலை நகர் பகுதியில் மட்டும் 124 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் கொரோனா தொற்று பரவலுக்கான குறைந்தபட்ச சாத்தியப்பாடுகளைக் கொண்ட பகுதிகள் என நம்பும் இடங்களை நாம் மூன்று இடங்களுக்குள் மட்டுப்படுத்தியுள்ளோம். 

அதாவது தற்போது கொழும்பில், நாகல்கம வீதி, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் நாரஹேன்பிட்டி - தாபரே மாவத்தை ஆகிய மூன்று பகுதிகளில் மட்டுமே கொரோனா பரவலுக்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதிகளை நாம் தொடர்ந்து தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றோம். 

அம்மூன்று பகுதிகளுக்கும் வெளியே தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. எனினும் அந்த பகுதிகளை அண்மித்துள்ள, அப்பகுதி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்கும் அனைவரையும் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளதால் தற்போதைய சூழலில் கொழும்பின் நிலை பூரண கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலும், ஏனைய பகுதிகளிலும் இனிமேலும் அப்பகுதியில் கொரோனா தொற்று பரவாது என்பதை நூற்றுக்கு நூறு வீதம் உறுதி செய்யும் விதமாக நாம் விஷேட இரத்த மாதிரி பரிசோதனைகள் ஊடான ஆய்வொன்றினையும் முன்னெடுத்து வருகின்றோம். 

அதாவது, கொழும்பு மாநகர சபை எல்லையில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் இதற்கான நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம். அதாவது, பண்டாரநாயக்க மாவத்தையில் சில கொரோனா தொற்றாளர்களை நாம் பரிசோதனை செய்த போது அவர்களுக்கு எந்த நோய் அரிகுறிகளும் இருக்கவில்லை. அத்துடன் கொரோனா தொற்றாளருடன் பழக்கத்தில் இருந்த பலருக்கு கூட அந்த தொற்று இருக்கவில்லை. 

இதற்கு காரணம் கொரோனா தொற்று ஒருவரின் உடலுக்குள் சங்கமித்ததும், குறித்த நபர்களின் நோய் எதிர்ப்பு அணுக்கள் வீரியமாக செயற்பட்டு கொரோனா வைரஸ் கிருமிகளை அழித்துள்ளமையே ஆகும். எனவே நோய் எதிர்ப்பு அணுக்களின் வீரியத்தின் அடிப்படையில், இந்த தொற்று பரவலுக்கான வாய்ப்புக்கள் குறைவடையும். 

எனவே வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதித்து அதனூடாக தீர்மானங்களுக்கு வரும் வழிமுறைகளை ஆரம்பித்துள்ளன. அதன்படி, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில், ஏற்கனவே கொரோனா தொடர்பில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட, உட்படுத்தப்படாத நபர்கள் பலரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு ஆய்வுகளுக்கு அனுப்பட்டுள்ளன. அதன் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிரதேசத்தின் கொரோனா பரவல் சாத்தியப்படுகள் தொடர்பில் உறுதியான முடிவுகளுக்கு வரக் கூடியதாக இருக்கும்.' என சுட்டிக்காட்டினார். 

அத்துடன் ஏற்கனவே கொழும்பு மத்திய பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரியும் 12 பொது சுகாதார பரிசோதகர்களும் கடமையில் இருந்து விலகியதால், கொழும்பின் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் அல்லது பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அது பாதிக்குமா என வைத்தியர் ருவன் விஜயமுனியிடம் வினவியபோது. எனினும், குறித்த வைத்தியரும் அவரது குழுவினரும் தற்போது மீள சேவையில் உள்ளதாகவும், அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை எனவும், அவர்கள் பணிகளில் இருந்து விலக முன்வைத்த காரணிகள் அசாதாரணமானவை எனவும் வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். 

'அந்த வைத்தியருக்கும் அவரது குழுவினருக்கும் ஏற்கனவே 5 நாட்களுக்கு முதல் பி.சி.ஆர். பரிசோதனைச் செய்து அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்தோம். மீள 5 நாட்களில் வந்து மீண்டும் பரிசோதனை செய்யுமாறு கோரினர். அப்போதே நான் மருத்தேன். சுகாதார சேவைகள் திணைக்களம் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க தேவையான வரையறுக்கப்பட்ட உபகரணங்களை மக்கள் நலனுக்காகவே எமக்கு கையளித்துள்ளன. அவற்றை பெற்று நாம் எமக்குள்ளேயே பரிசோதித்துக்கொன்டிருந்தால் நல்லதல்ல என நான் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். தற்போது அவர்கள் சேவையில் உள்ளனர். ' என தெரிவித்தார். 

No comments:

Post a Comment