கொரோனா ராஜபக்ஷர்களுக்கு அதிர்ஷ்ட சீட்டாக மாறியுள்ளது : ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பது பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிப்பதற்கு சமம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

கொரோனா ராஜபக்ஷர்களுக்கு அதிர்ஷ்ட சீட்டாக மாறியுள்ளது : ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பது பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிப்பதற்கு சமம்

(செ.தேன்மொழி) 

ரணில் - மைத்திரி செயற்பாடுகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியை ஒப்பிட்டு பார்க்காதீர்கள், நாங்கள் மாற்றத்திற்காக வெளியில் வந்தவர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிப்பதற்கு சமதமானதாகும். அதனால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க விரும்புவர்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். இதேவேளை கொரோனா வைரஸ் ராஜபக்ஷர்களுக்கு அதிர்ஷ்ட சீட்டாக மாறியுள்ளதாகவும், இதனை ஆதாரமாக கொண்டு மக்களை நன்கு ஏமாற்றி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் அரசாங்கத்திற்கு அதிர்ஷ்ட சீட்டாக மாறியுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதுடன், அதனை கொரோனா பரவல் காரணமாக நிறைவேற்ற முடியவில்லை என்று காண்பித்து தப்பிக் கொண்டு வருகின்றது. 

இந்த ராஜபக்ஷாக்கள் எப்போதும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்கள் அல்ல, ஜனாதிபதி தேர்தல் காலங்களில் எம்.சி.சி. ஒப்பந்தம் நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் அதனை கைச்சாத்திடக்கூடாது என்று சூளுறைத்தவர்கள் தற்போது எதற்காக ஒப்பந்தத்தின் திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டுக்கு பொருத்தமில்லாதது என்றால் அதனை உடனே நிராகரிக்க வேண்டும். நாங்களும் அதனையே செய்வோம். அதனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இது தொடர்பில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். 

எத்தகைய அனர்த்த நிலமை ஏற்பட்டாலும் நீதியான முறையில் ஆட்சி முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அது நாட்டிலுள்ள அனைவரையும் பாதிப்படையச் செய்யும். கொரோனா வைரஸ் மத்தியில் நாட்டை வழமைக்கு திருப்புவது தொடர்பிலே நாங்கள் கவனம் செலுத்தியிருந்தோம். அதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்தவித இடையூரையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. எவ்வாறாயினும் அரசியலமைப்புக்கு முரணாகாத வகையில் ஆட்சி இடம்பெற வேணடும். இல்லையேல் எதேச்ச அதிகாரமிக்க ஆட்சிக்கு வழிவகுத்துவிடும். 

உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதால், 40 இல்லது 50 ரூபாவால் எண்ணை விலையை குறைப்பதற்கான வாய்ப்பிருந்தும், ஐ.ஓ.சி நிறுவனம் எண்ணெய் விலையை அதிகரித்துள்ளது. அதற்கான காரணம் என்ன? ஏனைய நாடுகளில் எண்ணை விலை குறைந்துள்ள நிலையில் இங்குமற்றும் அதிகரிப்பது என்பது அதிலும் ஒரு ஒப்பந்தம் இருக்கின்றதா? என்பது தொடர்பில் எமக்கு விளக்கமில்லை. 

மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்திடம் நிதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றபோதிலும், கிரிக்கெட் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பாதைகள் அமைப்பதற்காக நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் தற்போதைய சூழ்நிலையில் அவசியமானதா?, யுத்த வெற்றியை காண்பித்துக் கொண்டு தங்களை பெரும் வீரர்களாக காண்பித்து வருபவர்கள், யுத்தக்களத்தில் நேரடியாக போராடி வெற்றியீட்டுக் கொடுத்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்ஷேக்கா போன்றவர்களை கண்பிப்பது கூட இல்லை. இதேவேளை இந்த வெற்றியைக் காண்பித்துக் கொண்டு ஏற்படவிருக்கும் பொருளாதார நெருக்கடியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. 

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வாறான நிவாரணமும் கிடைக்கவில்லை என்று அரச தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சில நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன. எமக்கு அச்சம் என்னவென்றால் இந்த நிதிக்கெல்லாம் சுனாமி நிதிக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டு விடுமோ என்பதே. 

யாராக இருந்தாலும் சொல்லும் வாக்கை காப்பாற்றுபவர்களாகவே இருக்க வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கையில் கூறுவது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக உள்ளது. இதனால் மக்கள் பொதுத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சரி நானும் சரி கொடுத்த வாக்கை மீறி செயற்படுபவர்களல்ல. 

இதேவேளை ரணில் மற்றும் மைத்திரியின் செயற்பாட்டுகளுடன் எம்மை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ரணில் எப்போதுமே ராஜபக்ஷாக்களின் அரவணைப்பில் இருப்பவர். தற்போதும் கூட அவர் அவ்வாறே இருக்கின்றார். அவரது செயற்பாடுகள் அதனை உணர்த்தியுள்ன. இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது, பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பதற்கு நிகரானதாகும், இதனால் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களித்தாலும் எதிராக வாக்களிக்க விரும்புபவர்கள் வாக்களிப்பதால் எந்தவித பயனும் இல்லை. 

இதேவேளை அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்துவது என்றால் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். தற்போதுள்ள நிலைமை கொஞ்சம் வழமைக்கு திரும்பியவுடன், மக்கள் அவர்களது செயற்பாடுகளை எந்தவித சிக்கலும் இன்றி முன்னெடுத்துக் கொண்டு போகும் போது, அவர்களிடத்தில் தேர்தல் பிரசாரத்தை செயற்வதற்கான சூழ்நிலைகள் எமக்கும் கிடைக்கப் பெறும் போது தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.

No comments:

Post a Comment