எதிர்த்தரப்பினர் மீதோ, முன்னைய அரசாங்கத்தின் மீதோ குறை சொல்வது முறையற்ற செயற்பாடாகும் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 30, 2020

எதிர்த்தரப்பினர் மீதோ, முன்னைய அரசாங்கத்தின் மீதோ குறை சொல்வது முறையற்ற செயற்பாடாகும்

(செ.தேன்மொழி) 

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றால் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து எதிர்த்தரப்பினர் மீதோ, முன்னைய அரசாங்கத்தின் மீதோ குறை சொல்வது முறையற்ற செயற்பாடாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்க முடியவில்லை. கொரோனா வைரஸ் பரவலை இதற்கு காரணமாக காட்டினாலும், வைரஸ் பரவலுக்கு முன்னரிருந்தே அரசாங்கம் எவ்வித பயன்தரும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வில்லை. 

இதேவேளை பசில் ராஜபக்ஷ ஊடக சந்திப்பொன்றின் போது தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக தனியார் துறை உரிமையாளர்களுக்கு போதிய நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தனியார் துறை ஊழியர்கள் நிறுவனங்கள் நிதியைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று தவறான எண்ணைத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு யாருக்குமே நிதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஏன் பசில் இவ்வாறு போலி பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றார். 

இதேவேளை மே மாத அரச ஊழியர்களின் ஊதியத்தை நிறுத்தி வைப்பதனால் 100 பில்லியன் ரூபாவை சேர்த்து வைக்க முடியும் என்று ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்திருந்தார். இவ்வாறு எவ்வளவு நிதியை தற்போது சேர்த்து வைத்துள்ளார்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும். 

தற்போதைய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற போது நெற்களஞ்சியசாலையில் ஒரு நெல் மணிகூட களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று அமைச்சர் மஹிந்த யாப்பா அபே வர்த்தன தெரிவித்திருந்தார். இது உண்மைக்கு புறம்பான தகவலாகும். நாங்கள் 42 மெட்ரிக் டொன் நெல்லை களஞ்சியப்படுத்தியிருந்தோம். அது தொடர்பில் ஆதாரங்களும்' எம்மிடம் இருக்கின்றன. 

அதேவேளை நுகர்வோர் அதிகார சபையிடம் அறிந்துகொள்ள முடியும். இந்த நெல்லுக்கு என்ன நடந்தது, அது எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அவர்கள் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசாங்கத்திற்கு உரிய முறையில் முகாமைத்துவம் செய்யமுடியவில்லை என்றால் அதனை எற்றுக் கொள்ள வேண்டும். இதனை விடுத்து கடந்த அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியையும் குறைகூறி வருவது நியாயமற்ற செயற்பாடாகும் என்றார்.

No comments:

Post a Comment