(ந.தனுஜா)
கொவிட்-19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு கிடைத்த நிதி, பொருள்சார் நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புக்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கம் சுயமாக முன்வந்து வெளிப்படுத்த வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது.
கொவிட்-19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு கிடைத்த நிதி, பொருள்சார் நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புக்கள் தொடர்பான தகவல்களை சுயமாக முன்வந்து வெளிப்படுத்துவதனூடாக கொவிட்-19 தொற்று நோயைக் கையாள்வதிலான பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான தலைமைத்துவத்தினை இலங்கை ஏற்படுத்திக் கொள்வற்கான சந்தர்ப்பத்தினை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அதன்படி இற்றைப்படுத்தப்பட்ட செலவின விபரங்களுடனான கிடைக்கப் பெற்ற நன்கொடைகள், அன்பளிப்புக்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கொண்ட இணையத்தளப் பக்கமொன்றை நிறுவுதல், கொள்முதல் செயன்முறையின் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பவற்றின் போது நேரந்தாழ்த்தாத இற்றைப்படுத்தப்பட்ட அனைத்து அரசாங்க கேள்விப்பத்திர அறிவித்தல்களையும் தொடர்புபட்ட ஆவணங்களையும் தொழில்நுட்ப மதிப்பீடுகளையும் தீர்மானங்களையும் வெளியிடுவதற்காக இலத்திரனியல் கொள்முதல் தளத்தைப் பேணல், தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கு அமைவாகவும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்கவும் சகல பொது அதிகாரசபைகளிலும் கடுமையாகப் பதிவு முகாமைத்துவ நணைமுறைகளுக்கான தேவையை மீள வலுப்படுத்தும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடல் ஆகியவற்றை நிதியமைச்சு உடனடியாக செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.
மேலும் வெற்றிகரமான கொவிட்-19 நிதிக்கொள்கை கையாளுகையில் நிதி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், பொதுப் பொறுப்புக்களைப் பாதுகாத்தல், நிறுவன சட்ட வலிதுடைத்தன்மையைப் பேணல் என்பவற்றை சர்வதேச நாணயம் முன்னிறுத்தியிருப்பதாகவும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
அத்தோடு தற்போதைய நெருக்கடி நிலையில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டியிருப்பதுடன், அனைத்துத் தகவல்களையும் மக்களுடன் பகிர்ந்துகொள்வது அவர்கள் அதனடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்ளவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கையுடன் செயற்படவும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment