எதிர்த்தரப்பினர் மீது சேறுபூசுதலை விடுத்து நாட்டை முன்னேற்றுவதில் ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் : ஹரின் பெர்னாண்டோ - News View

Breaking

Post Top Ad

Thursday, May 21, 2020

எதிர்த்தரப்பினர் மீது சேறுபூசுதலை விடுத்து நாட்டை முன்னேற்றுவதில் ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் : ஹரின் பெர்னாண்டோ

(செ.தேன்மொழி) 

அரசாங்கம் தற்போதுள்ள நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதை கவனத்திற்கொள்ளாது, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் மீது திட்டமிட்ட சேறுபூசல்களை முன்னெடுத்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக வாக்களித்த மக்கள் அரசாங்கத்திடம் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும், தற்போதுள்ள நெருக்கடியில் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் மீது சேறுபூசல்களை மேற்கொள்வதை பார்க்கிலும் நாட்டை முன்னேற்றுவது தொடர்பிலே அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். 

ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியதை அடுத்து நாங்கள் தெரிவித்துவந்த எதுவுமே பிழைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வந்த போதிலும் அரசாங்கம் தேர்தலை நடத்தும் எண்ணத்தில் நாட்டை திறந்து வைத்திருந்தமையினால் இன்று வைரஸ் பரவலினால் பெரும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. 

அரசாங்கம் வைரஸ் பரவலிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்துக் கொள்வதை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களை அடக்கி வைப்பதே மிக முக்கிய செயற்பாடாகியுள்ளது. 

அரசாங்கம் தங்களுக்கு சார்பான சில ஒப்பந்தக்கார்கள் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் சிறந்த பேச்சாற்றல் மிக்க உறுப்பினர்களை சிறைப்பிடித்து அவர்களை அடைத்து வைத்துவிட்டு, தங்களது இஷ்டம்போல் செயற்படுவதற்கு முயற்சிக்கின்றது. 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காணொளிகளை கொண்டு அரசாங்கத்திற்கு துணைபோகும் சில சதிகாரர்கள் ஊடாக அந்த காணொளிகளை மீள் திருத்தம் செய்து, அதில் அவர்கள் அடக்கி வைக்க எண்ணியிருக்கும் எதிபார்த்திருக்கும் எதிர்தரப்பு அரசியல்வாதிகளை தொடர்புபடுத்தி, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் மீது திட்டமிட்ட சேறுபூசல்களை முன்னெடுத்து வருகின்றனர். 

எம்முடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதன் உண்மை சம்பவம் தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்நிலையில் இந்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும். பொலிஸார் மீது எமக்கு பெரும் மதிப்பு உள்ளது. அவர்கள் அரசாங்கத்திற்கு துணைபோகாமல் நியாயமான முறையில் இந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். 

எதிர்தரப்பு அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்கைமுறையோ, தனிப்பட்ட செயற்பாடுகள் தொடர்பிலோ பேசித்திறிவதற்கான காலமல்ல இது, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீண்டெழச் செய்வதே முக்கியமான செயற்பாடாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad