நாட்டை ஸ்திரமற்றதாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 19, 2020

நாட்டை ஸ்திரமற்றதாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது - தயாசிறி ஜயசேகர

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் காலம் தாழ்த்தப்படுகிறது. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்நிலையில் நாட்டை ஸ்திரமற்றதாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது. பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும் அவ்வாறு செய்ய வேண்டிய தேவை கிடையாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது திங்கட்கிழமை நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. 

விசேடமாக நடைபெறவுள்ள தேர்தலுக்கான நடவடிக்கைகள், தேர்தல் நடத்தப்படும் போது சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்றம் இன்றி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

எனவே பொதுத் தேர்தலை ஜனாதிபதியால் காலம் தாழ்த்த முடியாது. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக ஜூன் 20 வரை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அது தேர்தல் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே இவ்வாறு தேர்தல் காலம் தாழ்த்தப்படுகிறது. 

தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்நிலையில் நாட்டை ஸ்திரமற்றதாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது. பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும் அவ்வாறு செய்ய வேண்டிய தேவை கிடையாது. இவர்கள் பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்காமையே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாகும். 

தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை பெறுமளவிற்கு நாடு ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். அவர்கள் மக்கள் பற்றி சிந்திக்காது தேர்தலை காலம் தாழ்த்தி எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுக்கவே முயற்சிகின்றனர். அரசியல் வேலைத்திட்டங்களை விஸ்தரிக்கின்றனர். நாம் அதனை எதிர்க்கின்றோம். 

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் தேர்தலை நடத்துவதற்கான தொடர் திட்டங்களை தேர்தல் ஆணைக்குழுவில் முன்வைக்கவுள்ளோம்.

No comments:

Post a Comment