பிரபல பாதாள உலக குழு தலைவன் 'கொஸ்கொட தாரக' தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து தொலைபேசிகள், சிம் அட்டைகள் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

பிரபல பாதாள உலக குழு தலைவன் 'கொஸ்கொட தாரக' தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து தொலைபேசிகள், சிம் அட்டைகள் மீட்பு

(எம்.எப்.எம்.பஸீர்) 

கொழும்பு விளக்கமறியல் சிறையில், பிரபல பாதாள உலக குழு தலைவனும் பல்வேறு திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபருமான 'கொஸ்கொட தாரக' தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்து 4 கையடக்கத் தொலைபேசிகளும், 5 சிம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. 

சிறைச்சாலை உளவுத்துறை அதிகாரிகள் முன்னெடுத்த விஷேட சோதனைகளின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிறைக்கூடத்தில் கொஸ்கொட தாரகவுடன் 10 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தியாவசிய சேவை எனும் துண்டுக் குறிப்புடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் கடத்திச் செல்ல, 5 மற்றும் 10 கிலோ அரிசி உரைகளில் சூட்சுமமாக மறைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 271 கோடி ரூபா பெறுமதியான 225 கிலோ 969 கிராம் நிறைக் கொண்ட ஹெரோயின் போதைப் பொருளினை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த 14 ஆம் திகதி நள்ளிரவு கைப்பற்றியுள்ளனர். 

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்தவுக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, நுக கஹவத்த வீதி, வெலிசறை, ராகமை எனும் முகவரியில் உள்ள கட்டிடம் ஒன்றினை சுற்றி வளைத்த போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், இதன்போது நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். 

இந்நிலையில் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில், கொஸ்கொட தாரக உள்ளமை வெளிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே சிறைச்சாலை உளவுத் துறையினர் திடீரென கொஸ்கொட தாரக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 

இதன்போதே இந்த தொலைபேசிகளும் சிம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த தொலைபேசிகள், சிம் அட்டைகளை மையப்படுத்தி பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் விஷேட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad