மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம் - ஐக்கிய தேசிய கட்சி - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம் - ஐக்கிய தேசிய கட்சி

(எம்.மனோசித்ரா) 

2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, இனவாதம் மற்றும் மக்கள் வர்க்க பிரிவினை தமது ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்களை தொடர்வதற்கு மேலும் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 30 வருடங்கள் நடைபெற்ற சிவில் யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 11 ஆவது வருடம் பூர்த்தியாகியுள்ளது. யுத்தத்தினால் உயிரிழந்த இராணுவ வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூறுகின்றோம். 

30 வருடங்களுக்கும் அதிக காலம் எமது நாடு மக்கள் வர்க்கத்தின் அடிப்படையில் பிளவடைந்து ஒவ்வொருவரும் போட்டிகளுடனேயே வாழ்ந்து வந்தனர். யுத்தம் நிறைவடைந்தன் பின்னர் எமது நாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் ஆரம்பமானது. 

பயங்கரவாதத்தின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி போன்று பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்த வேறு கட்சிகள் கிடையாது. மக்களின் பிரச்சினைகளுக்காக ஐக்கிய தேசிய கட்சி நீண்ட காலம் பல அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளது. 

2015 ஆம் ஆண்டு எமது அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்றது முதல் கட்சி ரீதியாக நாம் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்காகவும் மற்றும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். 

எம்மால் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்களை தொடர்வதற்கு மேலும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டின் தலைவர்கள் என்ற ரீதியில் மக்கள் வர்க்கம் மற்றும் மத ரீதியான பிரிவினை என்பவற்றை முடிந்தளவு இல்லாமலாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

எமது தலைமையில் கலந்துரையாடல்கள் மற்றும் சம்மேளனம் மாத்திரமே நடைபெற்றுள்ளது. எமது எதிர்கால சந்ததியினருக்காக இவை நடத்தப்பட வேண்டும். இனவாதம் மற்றும் மக்கள் வர்க்க பிரிவினை என்பவற்றை இல்லாமலாக்க இவை அவசியமானதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad