சீனாவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரேயொரு கொரோனா தொற்றாளர் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் தொடர்ந்தும் நான்காவது நாளாகவும் சீனாவில் கொரோனா காரணமாக எதுவித மரணமும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து பதிவான மிகப்பெரிய வீழ்ச்சியாக இது கருதப்படுவதுடன், கொரோனா தொற்று தொடர்பான ஆபத்து கடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
நேற்றைய தினம் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர் வெளிநாட்டிலிருந்து சீனாவுக்கு சென்றவர் ஆவார். சீனாவில் மொத்தமாக 82,875 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4,633 உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளான 77,685 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதுடன், 557 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை அழித்த சீனாவுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக உள்ள டாக்டர் மரியா வான் கெர்கோவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீனாவில் அவரசகால சட்டங்களை பின்பற்றி வீட்டிலேயே தங்கியிருந்த மக்களையும் அவர் பாராட்டியுள்ளதுடன், கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்கு கையாண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment