கனடாவில் தாக்குதல் பாணி துப்பாக்கிப் பாவனைக்கு அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடை விதித்துள்ளார்.
கனடாவில் தாக்குதல் பாணி துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அங்கு இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களையடுத்தே இந்த தடை உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1,500 தாக்குதல் பாணி துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்கும், கொண்டு செல்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் மற்றும் வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு ஈடுபட்டால் அது சட்டவிரோதமாகும் என அந்நாடு தெரிவித்துள்ளது.
இதேவளை இந்த துப்பாக்கிகளை ஏற்கனவே வைத்திருக்கும் நபர்களுக்கு தடைக்கு இணங்க அனுமதிக்க இரண்டு ஆண்டு பொதுமன்னிப்பு காலமும் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தடை செய்யப்படும் துப்பாக்கிகளை வைத்திருப்போருக்கு இழப்பீடு வழங்குவதற்காக சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.
2017 இல் கியூபெக்கில் உள்ள ஒரு பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு, 2018 இல் டொரெண்டோவிலுள்ள வணிகத் தெருவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பன அண்மைய நாட்களில் கனடாவில் பதிவான மிக மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களாக கருதப்படுகின்றன.
No comments:
Post a Comment