சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் வெளியுற அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் : சட்டத்தரணியின் கடிதத்தில் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் வெளியுற அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் : சட்டத்தரணியின் கடிதத்தில் தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் இலங்கை உள்ளிட்ட ஏனைய உலக நாடுகளில் பரவியமைக்கு சீனா பொறுப்புக் கூற வேண்டும். அவ்வாறு சீனா பொறுப்பு கூறாமலிருக்குமானால் அந்நாட்டு எதிராக இராஜதந்திர மட்டத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் தலைவர் எச்.வீ.ஆர்.புஷ்பகுமாரவினால் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

அவரால் வலியுறுத்தப்பட்டதன் படி சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இலங்கை வெளியுறவுகள் அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தன்னால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக எச்.வீ.ஆர்.புஷ்பகுமாரவின் சட்டத்தரணி சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை இவ்விடயம் தொடர்பில் சட்டத்தரணி சுனந்த தேசப்பிரிய வெளியுறவுகள் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் அனைத்து துறைகளிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைக்கான காரணமாக அமைந்த கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா பொறுப்பு கூற வேண்டும் என்று இதற்கு முன்னர் எனது தரப்பினால் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

அத்தோடு வைரஸின் உண்மை தன்மை பற்றி மறைத்தல் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இனங்காணப்படாமை என்பவற்றோடு வைரஸ் தொடர்பில் உரிய மதிப்பீட்டுக்கு வர முடியாததால் உலகில் ஏனைய நாடுகளிலும் வைரஸ் பரவுவதற்கு காரணமாக அமைந்தது. 

இதற்கு சீனா பொறுப்பு கூற வேண்டும் என்பதே எமது தரப்பு வாதமாகக் காணப்பட்டது. இது தொடர்பில் இலங்கையின் வெளிநாட்டுறவுகள் அமைச்சர் மற்றும் அவருக்கு கீழ் செயற்படும் வெளிநாட்டுறவுகள் அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதற்கு சீனா பொறுப்பு கூறாவிட்டால் அதற்கு எதிராக செயற்பட வேண்டும் என்றும் பிரஜைகளின் உரிமைக்கான எமது தரப்பு கோரியிருந்தது. 

அதற்கமைய எனது தரப்பு நாட்டு மக்களின் உரிமைக்காக சீன அரசாங்கத்திற்கு எதிராக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இலங்கையின் அரசியலமைப்பின் 140 ஆவது உறுப்புரையின் கீழ் மற்றும் ஏனைய வேறு வழிமுறைகளின் கீழும் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு என்னால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad