(தி.சோபிதன்)
வடக்கு மாகாணம் கல்வியில் தொடர்ச்சியாக வீழ்ச்சியான நிலையில் காணப்படுவதற்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடே காரணம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது வடக்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடு.
இதனை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். மாகாண சபை ஆட்சியில் இருந்தபோது கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும், ஆசிரியர்கள் பகிரந்தளிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பல தடவைகள் கூறியிருந்தேன். எனினும் அதனை எவரும் செவிமடுக்கவில்லை.
பின்னடைவில் இருப்பதற்கு காரணம் யுத்தத்தின் விளைவு யுத்தத்தின் விளைவு என்றே கூறிக் கொண்டிருந்தார்கள். போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் ஆகியும் கல்வியில் முன்னேற்றம் காண முடியாத நிலைமை காணப்படுகின்றது. ஆடத் தெரியாதவள் மேடை சரியில்லை என்பதுபோல எதற்கெடுத்தாலும் யுத்தம்தான் காரணம் என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
கல்வி முகாமைத்துவம் என்பது மாகாணத்தின் விடயமாகும். அதனை இவர்கள் செய்யாது விட்டுவிட்டு ஒவ்வொரு நொண்டிச் சாட்டுகள் கூறிக்கொண்டு இருப்பதில் பயனில்லை. மாகாண சபை விட்டதன் விளைவுதான் இன்று வரை வடக்கு மாகாணம் கல்வியில் பின்னடைவில் இருக்கின்றது.
மாகாண சபை ஆட்சியில் இருந்தபோது கல்வியமைச்சர் தான் கல்வியை முன்னேற்ற போவதாக சில வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர்களது சண்டையில் புதிதாக ஒரு கல்வியமைச்சர் வந்தார். அவரும் தான் கல்வி தொடர்பில் புதிய திட்டங்களை செய்யப்போவதாக கூறினார். அவர் வேலையை தொடங்குவதற்கு முன்பாகவே மாகாண சபையின் ஆட்சி காலம் முடிவடைந்து விட்டது. மாகாண சபையை வினைத்திறனாக செயற்படுத்தாமல் விட்டுவிட்டு போரைக் காரணம் காட்டுவதில் எந்த நியாயமும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment