சிகையலங்கரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி கோரி மகஜர் கையளிப்பு ! - News View

About Us

About Us

Breaking

Saturday, May 2, 2020

சிகையலங்கரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி கோரி மகஜர் கையளிப்பு !

மன்னார் பிரதேச சிகையலங்கரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

கோரிக்கை அடங்கிய மகஜர் இன்று சனிக்கிழமை (2) மன்னார் பிரதேச சிகையலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் என்.எஸ்.றெஜி,செயலாளர் சகாய நாதன் ராஜா ஆகியோர் கையெழுத்திட்டு குறித்த மகஜரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர். 

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் பிரதேச சிகை அலங்கார தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் ஆகிய நாம் எமது பணிவான வேண்டுகோளினை தங்களின் மேலான கவனத்திற்கு முன்வைக்கின்றோம். 

நாட்டில் ஏற்பட்டுள்ள 'கொரோனா' நோய் தொடர்பான சுகாதார செயற்பாடுகளுக்கு நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் எமது முழுமையான ஆதரவினையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

மேற்படி தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் செயற்பாடுகளின் ஒன்றான 'சிகை அலங்கரிப்பு நிலையங்களை' மூடுகின்ற செயற்பாட்டினால் எமது சங்கத்தின் அங்கத்தவர்கள் அவர்களை நம்பி வாழ்கின்ற குடும்பத்தினரும் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. 

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தொடர்ச்சியான ஊரடங்கு சட்டத்தின் காரணமாக மிகவும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளோம். அரசின் தற்போதைய அறிவிப்பால் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம். 

இந்த நிலையில் கடந்த 22 ஆம் திகதியன்று மன்னார் மாவட்ட சுகாதார பணிமனையில் எமது சங்க உறுப்பினர்களுக்கு என இரண்டு பிரிவாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி, மன்னார் நகர சபை செயலாளர், மன்னார் உள்ளுராட்சித் திணைக்கள அதிகாரிகள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இக்கலந்துரையாடலின் போது 'மல்டி மீடியா' மூலமான செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. சிகை அலங்கரிப்பு நிலையம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதற்கான கையேடு வழங்கப்பட்டது. 

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தொடர்ச்சியான காவல்துறை ஊரடங்குச் சட்டம் காரணமாக சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள், முதியவர்கள், அலுவலகப் பணியாளர்கள் என பல்வேறு நிலையில் உள்ளோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே மேற்படி விடயங்களைக் கருத்தில் கொண்டும் எமது மாவட்ட மக்களிடம் இந்த நிலையை நிவர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாம் சிகை அலங்கரிப்பு நிலையங்களை தொடர்ந்தும் தங்களது அறிவித்தலின் படி இயங்க ஆவணம் செய்யுமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த மகஜரின் பிரதிகள் மன்னார் பொலிஸ் நிலையம் , மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment