(ஆர்.ராம்)
நாட்டிற்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவையா இல்லையா என்பதை பொதுமக்கள் தீர்மானிப்பதற்கு இடமளிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம வலியுறுத்தியுள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டன. சுயாதீன ஆணைக்குழுக்களைப் பொறுத்த வரையில் ஜனநாயகத்தின் இலட்சணங்களை வெளிப்படுத்துபவையாகவும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளின் குரல்களாகவும் இருந்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் 19 ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமான வெவ்வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக கூறுவதானால், நிறைவேற்று அதிகாரம் இந்தச் சட்ட திருத்ததால் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் ஆகவே 19 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற மனநிலையிலும் உள்ளனர்.
இந்த மனநிலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அடுத்த பொதுத் தேர்தலில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அபிப்பிராயத்தினைக் கொண்டவர்களும் உள்ளனர்.
என்னைப் பொறுத்த வரையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள், அவை இருப்பதனால் இருக்கும் பலாபலன்கள் உள்ளிட்டவை தொடர்பில் பொதுமக்கள் புரிதலைக் கொண்டிருப்பார்கள். ஆகவே அவர்கள் சுயமாக தீர்மானித்து முடிவெடுப்பதற்கு இடமளிக்க வேண்டும். பொதுமக்களின் சிந்தனையில் வலிந்து திணிப்புக்கள் மூலம் திசைமாற்றக்கூடாது என்றார்.
No comments:
Post a Comment