(இராஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலை தொடர்ந்து பிற்போட எதிர்த்தரப்பினர் அரசியல் சூழ்ச்சியினை முன்னெடுக்கின்றார்கள். அங்கீகரிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்த்தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து தடைகளை பல்வேறு வழிமுறைகளில் ஏற்படுத்தினார்கள். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை பயன்படுத்தி தொடர்ந்து பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் பாரிய தோல்வியடைய நேரிடும் என்ற காரணத்தினால் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். அங்கீகரிக்கப்பட்ட வேட்புமனுக்கலை இரத்து செய்ய வேண்டும் என எதிர்த்தரப்பினர் குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பிளவுப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றுபடுத்தி புதிதாக வேட்பு மனு தாக்கல் செய்யவே எதிர்தரப்பினர் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுமாறு குறிப்பிடுகின்றார்கள்.
தேர்தல் ஆணைக்குழு அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை கிடையாது. ஆணைக்குழுவின் சுயாதீன தன்மைக்கு ஏற்ப செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வை காணலாம் என்றார்.
No comments:
Post a Comment