தனிமைப்படுத்தப்பட்டிருந்த மருதானை இமாமுல் அரூஸ் மாவத்தை இன்று (03) திறக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டிருந்த மருதானை இமாமுல் அரூஸ் மாவத்தை இன்று திறக்கப்பட்டது.
இப்பகுதியிலிருந்து கொரோனா நோயாளியுடன் தொடர்புபட்ட 302 பேர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி தங்களது வீட்டுக் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதோடு, இன்று (03) அக்கால எல்லை நிறைவடைந்த நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவின் உத்தரவுக்கமைய குறித்த பகுதி தற்போது திறக்கப்பட்டுள்ளது.
ஆயினும் தொடர்ந்தும் ஊரடங்கு நிலவுவதால் அதற்கு அமைய செயற்படுமாறு அவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இப்பாதை மூடப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதியில் குடியிருந்த மேலும் சுமார் 500 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்காலப் பகுதியில் இப்பகுதியிலுள்ளவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகாதிருக்க முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து அவர்கள் தங்களது இடத்திலிருந்தவாறு கேட்கும் மற்றும் பார்க்கும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment