பொதுத் தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை 4ஆம் நாளாக மீண்டும் ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 21, 2020

பொதுத் தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை 4ஆம் நாளாக மீண்டும் ஒத்திவைப்பு

ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் ஜனாதிபதியினால் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் பரீசீலனை நாளை (22) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி முதல் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குறித்த மனு, நான்காவது நாளாக இன்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று (21) முற்பகல் 10.00 மணிக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிகாரே,சிசிர அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி செயலாளர் கலாநிதி. P.B. ஜயசுந்தரவின் சார்பில் ஆஜராகிய, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா இன்று சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் ஒருமைப்பாடு இல்லாமையே, தேர்தல் உரிய முறையில் நடத்த முடியாமல் போனமைக்கு காரணம் என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இன்று மன்றில் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தும் தேவை முதலில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இருக்க வேண்டும் எனவும், தற்போது அதனைக் காண முடியவில்லையெனவும், அதனாலேயே ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் விடயங்களை முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான உத்தரவை ஜனாதிபதி வழங்கியுள்ள போதிலும் தேர்தல் ஆணைக்குழுவின் இயலாமை காரணமாகவே தேர்தலை நடத்த முடியாமல் போயுள்ளதாக அவர் தௌிவுபடுத்தினார்.

எனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் இயலாமைக்கு ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டுமா என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதியரசர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

எனவே, ஜனாதிபதியின் உத்தரவை செல்லுபடியற்றதாக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரம் எவ்வாறு ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது என்ற விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று கவனம் செலுத்தப்பட்டது.

இந்த காலத்தில் பொதுச் சேவைக்காக பயணத்தை ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பொதுச் சேவை என்றால் என்ன என்பது தொடர்பிலான பொருள் கோடலை வழங்குமாறு இதற்கு முன்னர் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

பாராளுமன்ற ஆவணத்தை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, பொதுச் சேவைக்கு பணம் ஒதுக்குவது என்பது சம்பளம் வழங்குவது மாத்திரம் அல்ல, அபிவிருத்தி விடயங்கள் மற்றும் கடன் பெறுவதும் இதில் அடங்குவதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாகவும் எதிர்க்கட்சிகள் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் விடயங்களை தௌிவுபடுத்தினார்.

குறித்த மனுக்கள் மே 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பரிசீலிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தொடர்ச்சியாக 4ஆவது நாளாக எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, மீண்டும் நாளை (22) காலை 10.00 மணி வரை இம்மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment