(எம்.மனோசித்ரா)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கலந்துகொள்ளும் எனத் தெரிவித்த அந்த கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க, கொரோனா ஒழிப்பிற்கான அனைத்து செயற்பாடுகளிலும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க சுதந்திர கட்சி தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே வீரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. இவ்வாறு மக்களின் நலனுக்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகவுள்ளது.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய இது போன்றதொரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி அடிப்படையற்று செயற்படுகின்றன. எனவே அவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருவதோ ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் அரச நிதியை ஜனாதிபதியால் செலவு செய்ய முடியாது எனக் கூறுவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அரச நிதி செலவுகளை முகாமைத்துவம் செய்யாமல் இருக்க முடியுமா ? எனவே தான் அதற்கான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனை எதிர்தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment