கஜேந்திரகுமார் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 11 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

கஜேந்திரகுமார் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 11 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

மே மாதம் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளா் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்ட ஆலோசகா் சட்டத்தரணி கனரட்ணம் சுகாஷ், சட்ட ஆலோசகா் சட்டத்தரணி நடராசா காண்டீபன், யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினா் வரதராஜன் பாா்த்திபன், யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினா் தனுசன், யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினா் கிருபாகரன், கனகசபை விஸ்ணுகாந், சுதாகரன், தமிழ்மதி ஆகியோரை எதிர்வரும் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடா்பான கட்டளை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு 17 ஆம் திகதி குருநகா், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தமிழாராச்சி மாநாட்டு நினைவிடம் ஆகிய இடங்களில் அஞ்சலிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நிகழ்வுகளை நடத்தியமையால் இந்த கட்டளை நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டளைகளை யாழ்ப்பாண பொலிசார் இன்றிரவு அவர்களின் வசிப்பிடங்களுக்கு நேரில் சென்று சமர்ப்பித்தனர்.

அஞ்சலி நிகழ்வுகளில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதும், அஞ்சலி நிகழ்வை தடை செய்ய கோரியும் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று மனு தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே முன்னணியினரை தனிமைப்படுத்தப்படும் உத்தரவு இன்றிரவு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment