(நா.தனுஜா)
முதன்முதலாக சீனா கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்திற்குள்ளான போது இலங்கையினால் வெளிக்காட்டப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகளை ஒருபோதும் மறக்க மாட்டோம் எனக் குறிப்பிட்டிருக்கும் சீனா, தற்போது இலங்கை வைரஸ் தொற்றினால் பெரும் நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில் இலங்கைக்கு அவசியமான மருத்துவ உதவிகளையும், மருந்துப் பொருட்களையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதுடன் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சீனாவினால் கடைப்பிடிக்கப்பட்ட நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீனத்தூதரக அரசியல் பிரிவின் பிரதானியும், ஊடகப் பேச்சாளருமான லூவோ சொங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜீ நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார். இதன்போது சீனா - இலங்கைக்கு இடையிலான மிக நீண்டகால நெருங்கிய நட்புணர்வு தொடர்பில் இருவராலும் நினைவுகூரப்பட்டது.
மேலும் சீன வெளிவிவகார அமைச்சர் கூறியதாவது 'முதன்முதலாக சீனா கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்திற்குள்ளான போது இலங்கை உதவியதுடன், ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டியது. சீனாவிற்காக பிரார்த்தித்து மஹிந்த ராஜபக்ஷவினால் பிரித் ஆராதனைகளும் நடத்தப்பட்டன. அதுமாத்திரமன்றி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீனாவில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்ட போது அங்குள்ள இலங்கைத் தூதரகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. அத்தகைய செயற்பாடுகளை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
இந்நிலையில் தற்போது இலங்கை கொரோனா வைரஸ் தொற்றினால் பெரும் நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கிறது. இவ்வேளையில் இலங்கைக்கு அவசியமான மருத்துவ உதவிகளையும், மருந்து பொருட்களையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதுடன் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சீனாவினால் கடைப்பிடிக்கப்பட்ட நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் தயாராகவுள்ளோம். மிக விரைவில் இலங்கை இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் என்று உறுதியாக நம்புகின்றோம்.
கொரோனா வைரஸ் என்பது முழு உலகையுமே பாதித்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் ஒரு தொற்று நோயாகும். இதற்கு எதிராகப் போராடுவதற்கு ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.
அவ்வாறிருந்தும் சில நாடுகள் தற்போதும் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதுடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கத்தவறிய தமது செயற்திறனை மறைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீதும் பழிசுமத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இது மிகவும் கொடூரமானதானகும். தமது நாட்டுமக்கள் மிகமோசமாக வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கூட அவர்கள் இவ்வாறு செயற்படுவது முழு உலகினாலும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும்'.
No comments:
Post a Comment