உணவுப் பஞ்சத்தை தவிர்க்க இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய நிலங்களை விடுவியுங்கள் - வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

உணவுப் பஞ்சத்தை தவிர்க்க இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய நிலங்களை விடுவியுங்கள் - வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்

யாழ்ப்பாணத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய நிலங்களை இராணுவம் விடுவிக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதிகள் தடைப்படும் என தெரிவித்துள்ள அவர், குறித்த நிலங்களை விடுவிக்கும் முயற்சியை ஜனாதிபதி நியமித்துள்ள செயலணி முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பணத்தில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அதிலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட முடியாத கவலைக்கு உரிய மாவட்டமாக இருக்கின்றது.

இந்த நெருக்கடிக்குள் உள்ளாகியிருக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதியினால் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஓரளவு வசதி உள்ளவர்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடும். எனினும் தினக்கூலி செய்து வாழும் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

யாழ்ப்பணத்தில் அத்தியவசியப் பொருட்கள்கூட ஐம்பது வீதத்துக்கும் மேல் அதிகரித்த விலையில் வர்த்தகர்கள் பலர் விற்பனைசெய்து வருகின்றனர். இது அடித்தட்டு மக்களை இன்னும் வெகுவாகப் பாதிப்படையச் செய்கின்றது. ஆகவே இவ்வாறான பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது சில விடயங்களை உணர்த்துகின்றன.

அதாவது, இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியவசியப் பொருட்கள் இருப்பில் இருக்கும். அவை முடிவடைந்த பின்னர் வழமையாக இறக்குமதி செய்யும் நாடுகளில் இருந்து எமக்கு கிடைக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஏனெனில் கொரோனா வைரசினால் உலக நாடுகளில் முக்கிய பல நாடுகள் பாதிப்படைந்துள்ளன. வெளிநாடுகளிலும் உற்பத்திகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளன.

இவ்வாறான நாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினால்கூட அவர்கள் வழமைக்குத் திரும்ப குறைந்தது ஆறு மாதங்கள் எடுக்கலாம். அப்படியானல் அவர்கள் எமக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வார்கள் எனக் கூறமுடியாது. எனவே நாம் எமக்கான உணவுப் பொருட்களை உற்பத்திசெய்ய முயற்சி எடுக்க வேண்டும்.

குறிப்பாக, யாழ்ப்பணத்தில் ஏராளமான விவசாயக் காணிகள் பயன்படுத்தப்படாமல் இராணுவத்தின் பிடிக்குள் உள்ளன. அவற்றை உடனடியாக இராணுவத்தினர் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவசர தேவையாக கருதி தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் மாத்திரமே வடக்கில் உணவுப் பிரச்சினையைத் தவிர்க்க முடியும். வலி. வடக்கில் முன்னைய காலங்களில் ஏராளமான விவசாயிகள் தானிய உற்பத்திகளை மேற்கொண்டிருந்தனர். அவற்றை அவர்கள் மீண்டும் செய்ய இராணுவம் வழிவிட வேண்டும்.

ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணி உடனடியாக அதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த செயலணியில் வடக்கு மாகாண ஆளுநர், அரச அதிபர், பிரதம செயலாளர் போன்றவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் செயலணியில் இந்த விடயத்தை கவனத்திற்குக் கொண்டுசென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment