(நா.தனுஜா)
நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமாத்திரமன்றி இது விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை பொறுப்புணர்வுடனும் சிரத்தையுடனும் மேற்கொள்ள வேண்டும் என்று இளம் வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து அச்சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, பொலிஸ் ஊடகப் பிரிவினால் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசாங்க அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர்களது சிறு குறைபாடுகளை விமர்சிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் தமது சமூகவலைத்தளப் பக்கங்களில் அத்தகைய விமர்சனங்ளை முன்வைத்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடக செய்திகள் மூலம் அறியமுடிகிறது.
அரசியலமைப்பின் 14(1) (அ) பிரிவின்படி தமது கருத்துக்களை வெளியிடுவது ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படை மனித உரிமையாகும். அவ்வாறிருக்கையில் அதனை ஓர் அறிக்கையின் மூலம் மட்டுப்படுத்துவதென்பது அரசியலமைப்பிற்கு முரணான செயல் என்றே நாம் கருதுகின்றோம்.
குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கு சேவை வழங்குவதற்காகவே நியமிக்கப்பட்டிருப்பதுடன், அதிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்குப் பொதுமக்களுக்கு இடமளிப்பது முக்கிய ஜனநாயகப் பண்பாகும்.
அந்த விமர்சனங்களின் அடிப்படையில் குறைபாடுகளை சீரமைத்து, சிறந்த மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு இந்த ஜனநாயக இடைவெளி அவசியமாகும். எனினும் அத்தகைய கருத்துக்களை வெளிப்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதென்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
எத்தகையதொரு நெருக்கடி நிலையின் மத்தியிலும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம் என்பதுடன், கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி என்ற போர்வையில் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாம் வன்மையாகக் கண்டனம் செய்கின்றோம்.
No comments:
Post a Comment