பெருந்தோட்டத்தை அண்டிய நகரங்களுக்கு குறைந்தளவான மக்களே இன்று வருகை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

பெருந்தோட்டத்தை அண்டிய நகரங்களுக்கு குறைந்தளவான மக்களே இன்று வருகை

பெருந்தோட்டப்பகுதியை அண்டியுள்ள நகரங்களுக்கு இன்று (01) காலை வேளையில் வழமையை விடவும் குறைந்தளவான மக்களே வருகை தந்திருந்தனர்.

நாட்டில் கடந்த 20 ஆம் திகதியே ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இடையிடையே ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தளர்த்தப்படும் போது காலை 6 மணிக்கே மலையகத்திலுள்ள நகரங்களில் பெருந்திரளான மக்கள் குவிந்து விடுவார்கள்.

அத்தியாவசியப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பார்கள். ஆனால் இன்று காலை வேளையில் வழமையைவிடவும் மக்கள் நடமாட்டம் 50 வீதமாக குறைந்திருந்தது.

ச.தொ.ச. நிலையங்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வரிசையில் நிண்டாலும் சன நெரிசல் இருக்கவில்லை. சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார நடைமுறைகளை கடைபிடித்தனர்.

அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பொகவந்தலாவ உட்பட நகரங்களில் இந்நிலைமையை காணக்கூடியதாக இருந்தது. வழமைபோல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பொலிஸார் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

கடந்த 30 ஆம் திகதி ஊடரங்குச்சட்டம் தளர்த்தப்பட்டபோது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டதாலேயே இன்றைய தினம் நகரங்களுக்கு வருகை தரவில்லை எனக் கூறப்படுகின்றது.

எனினும், இன்று 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் ஏப்ரல் 6 ஆம் திகதி காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என இன்று முற்பகல் அறிவிக்கப்பட்டதால், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சிலர் அவசர அவசரமாக வருவதையும் காணமுடிந்தது.

அதேவேளை, கட்டுப்பாட்டு விலையை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான வர்த்தகர்கள் அந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை. அதிக விலைக்கே பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்று நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment