மக்கள் வறுமையில் வாடுகின்ற நிலையில் தேர்தல் அவசியமா ? ஒத்திவைக்குமாறு இரா.துரைரெத்தினம் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

மக்கள் வறுமையில் வாடுகின்ற நிலையில் தேர்தல் அவசியமா ? ஒத்திவைக்குமாறு இரா.துரைரெத்தினம் கோரிக்கை

கொரோனா (கொவிட்-19) வைரசினால் மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக பாதிப்படைந்து வறுமையில் வாடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, இது தொடரும் பட்சத்தில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலையில் பொதுத் தேர்தல் என்பது அவசியமா என்றும் அதனை ஒத்திவைக்குமாறும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவைமட்டுமின்றி குறைந்தது ஐந்து வருடங்களுக்குள் பொருளாதார ரீதியான பலவீனங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்ததைப் பொறுத்த வரையில் மிகவும் சிறப்பான முறையில் அரசாங்க அதிபர் தலைமையில் அரசாங்கமும், சுகாதாரப் பணிப்பாளர், வைத்தியசாலைப் பணிப்பாளர்கள், சுகாதார பரிசோதகர்கள், உள்ளூராட்சி சபைகள், ஏனைய பாதுகாப்புப் பிரிவினர் வைரஸ் தொடர்பாக பல தேவைகள் இருந்தும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவைகளை செய்து வருவது பாராட்டக்கூடியதும், மகிழ்ச்சிக்குரியதமாகும். 

இந்த நிலையில் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு வறட்சியும், மீன் பிடித்தொழில் செய்பவர்களுக்கு வறுமையும், கூலித் தொழில் செய்பவர்களுக்கு எவ்வித வருமானமும் இன்றியும், ஏனைய கால்நடை பண்ணையாளர்களுக்கும், கால்நடைகளுக்கு குடிநீர் இன்றியும், ஆட்டோ வாகனச் சாரதிகளுக்கு உணவின்றியும், ஏனைய துறைசார்ந்த தொழில் செய்வோரும், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், தொழில்சாலைகள், உணவு விடுதிகள், ஏன் அரச உத்தியோகத்தர்களுக்கும் கூட அன்றாட உணவிற்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளன. 

முதலில் இவர்களுக்கான பிரச்சினைகள் தீர்ந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அதன் பிற்பாடு தேர்தல் சம்பந்தமாக இம்மாவட்டத்தில் ஆலோசிக்க முடியும். சிலர் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவோர் ஒருசில பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருட்களை கொடுத்து வாக்குகளை பெற முடியுமென நினைக்கின்றனர். 

எமது சமூகம் தமிழ் மக்களின் உரிமைக்காக வாக்களித்து பழக்கப்பட்டவர்கள். வாக்களித்தவர்கள். உரிமைகளை விட்டுக் கொடுக்க எந்தச் சந்தர்ப்பத்திலும் விலை போகவில்லை என்பதை புரிந்து கொண்டு மனிதாபிமமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

அரசைப் பொறுத்தவரையில் வறுமையில் வாடுகின்ற அனைவருக்கும் வறுமைகளைப் போக்குவதற்கு நிதி ஓதுக்கீடு செய்யுமாறு மாண்புமிகு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கின்றேன்.

No comments:

Post a Comment