(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடல் புதைக்கப்பட்டால் மண் மூலம் வைரஸ் பரவக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் முன்னரே அறிவித்துள்ளது. அதற்கேற்பவே உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், முன்னாள் பிரதமர் மற்றும் மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் பரிசோதனைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்திலேயே வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளே எம்மால் முன்னெடுக்கப்பட்டன. எனினும் நாட்டினுள் வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் அது மேலும் விரிவடையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
உதாரணமாக கிரிக்கட் விளையாட்டுப் போட்டியை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் அதனைப் பார்ப்பதற்கான அனுமதி டிக்கட்டுக்களைப் பெற்றுக் கொள்வதிலேயே நாம் கவனம் செலுத்துவோம்.
அதனை விடுத்து ஆரம்பத்திலேயே கிரிக்கட் விளையாட எத்தனிக்க மாட்டோம். மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படும் நடமுறைகள் இது போன்ற இரண்டாவது கட்டமேயாகும்.
நாம் எவ்வாறு வைரசுடன் போராடுவது என்பது பற்றி தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த அனைத்து காரணிகளையும் எடுத்துக் கொள்ளும் போது இந்த வைரஸ் சமூகத்திற்குள் மேலும் பரவுவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க முடியாது.
கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு 3 மாதங்களாகின்றன. எனினும் இந்த வைரஸின் தன்மை மற்றும் செயற்பாடுகள் குறித்து இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும் வைரஸ் பரவும் வேறு வழிமுறைகள் பற்றி தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பற்றி வெளியிடப்படும் சில தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாகவும் உள்ளன.
வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர்களின் இறுதி சடங்குகளை வெகு துரிதமாக செய்ய வேண்டிய துரதிஷ்டவசமான சூழலிலேயே தற்போது நாம் இருக்கின்றோம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் முன்னரே அறிவித்துள்ளது.
இவற்றுக்கிடையில் மேலும் வைரஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதனை தடுக்க நாம் முயற்சிப்போம். அத்தகைய உடல்களைப் புதைப்பதற்கு அதிக நேரம் எடுப்பதோடு இதற்கு கூடுதலான மனித வளமும் தேவைப்படும்.
தற்போது காணப்படும் நிலைவரத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியும். எனினும் நாம் எதிர்பாராத அளவு மரணங்கள் அதிகரித்தால் எம்மால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் பேகும். உடல்களை தகனம் செய்யும் போது நாட்டின் நிலைமை தொடர்பில் ஆராய வேண்டும்.
நாட்டில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வெவ்வேறு நிலைமைகளே காணப்படுகின்றன. எம்மால் ஏதாவது ஒரு பிரதேசத்தில் இடம்பெறும் சம்பிரதாயத்தைக் கூறி அதன் படி செயற்படுமாறு கூற முடியும். எனினும் முழு நாட்டுக்கும் ஒரே வழிமுறையை ஏற்படுத்துவது சிரமமாகும்.
நாட்டில் நீரின் அளவு உயர் மட்டத்திலேயே காணப்படுகிறது. அது மாத்திரமின்றி மண் உரத்தைக் கொண்டதாகவும் இருக்கிறது. இவ்வாறிருப்பதால் வைரஸ் மண் மூலம் பரவக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அவ்வாறிருப்பினும் நீர்கொழும்பில் காணப்படும் அதே நிலைமை மட்டக்களப்பில் காணப்படுவதில்லை. மட்டக்களப்பில் காணப்படும் நிலைமை மாத்தறையில் காணப்படுவதில்லை. மக்களுடன் இணைந்தே எம்மால் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இது மிக முக்கியமானதொரு விடயமாகும். நீர்கொழும்பில் ஏற்பட்ட நிலைமையை அவதானிக்கும் போது, அந்த பிரதேச நிலத்தில் நீர் மட்டம் உயரத்திலிருப்பதால் உடலை மாளிகாவத்தைக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டது. எனினும் அங்கு செல்வதற்கு தூரம் அதிகமாகும்.
எனவே நோயாளர் எந்த வைத்தியசாலையில் இருந்தாலும் அவர் உயிரிழந்தால் அருகிலுள்ள தகன சாலையில் தகனம் செய்வதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.
No comments:
Post a Comment