கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தேசிய பாதுகாப்பை பேணுவதில் அரசாங்கம் அதிக கவனத்துடனே உள்ளது - பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தேசிய பாதுகாப்பை பேணுவதில் அரசாங்கம் அதிக கவனத்துடனே உள்ளது - பாதுகாப்பு செயலாளர்

முழு உலகமும் கொரோனா வைரஸ் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்த சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வரும் இலங்கை அரசு, தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்கும் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும், வைரஸ் தொற்று அதிகம் உள்ள இடங்களில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும், ஏனைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"இலங்கையின் முப்படை, பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியன ஒன்றிணைந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்திவரும் அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயல்முறைக்கும் பங்காற்றி வருகின்றனர் என இலங்கை கடற்படையினரால் ஆறு நாட்களுக்கு முன்பு சர்வதேச கடற் பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட ரூ. 12,500 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் சயுர ஆழ்கடல் ரோந்துக் கப்பலினால் 605.4 கிலோ ஐஸ் போதைப்பொருள் 579.5 கிலோ கீடாமைன், 200 பக்கெட் பாபுல் மற்றும் இனம் காணப்படாத 100 கிராம் மாத்திரைகள் என்பன அடையாளம் காணப்படாத வெளிநாட்டு கப்பலிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் பெருந்தொகையான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்ட இந்நிகழ்வானது, கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடுகின்ற போதிலும் நாட்டைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என தெரிவிப்பதற்குரிய ஒரு சிறந்த உதாரணம் ஆகும் என அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு இந்த அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் அபாயம் நிலவுகின்ற போதும் தெற்கு கடற்கரையிலிருந்து 463 கடல் மைல் (835 கி.மீ) தொலைவில் எந்தவொரு நாட்டினதும் கொடி ஏற்றப்படாத வெளிநாட்டு கப்பலில் இருந்த போதைப் பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய 9 பாகிஸ்தானிய போதைப் பொருள் கடத்தல்காரர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியல் டி சில்வா தலைமையிலான கடற்படை வீரர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச போதை மருந்து கடத்தல் வலையமைப்புகளை சேர்ந்தவர்களை கைது செய்ய மேற்கொண்ட இந்த வீரச்செயல்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர், இராணுவ புலனாய்வு உட்பட அனைத்து புலனாய்வு அமைப்புகளும், பயங்கரவாத மற்றும் தீவிரவாதத்தில் உள்ள சில கூறுகள் மீளுருவாக்கம் பெறுதல் உட்பட எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சு

No comments:

Post a Comment