தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை கையளிக்க இது பொறுத்தமான நேரமல்ல - தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெப்ரல் கடிதம் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 25, 2020

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை கையளிக்க இது பொறுத்தமான நேரமல்ல - தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெப்ரல் கடிதம்

(எம்.மனோசித்ரா) 

நாட்டில் தற்போது காணப்படுகின்ற வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்கு இது பொறுத்தமான நேரமல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள பெப்ரல் அமைப்பு, இது தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. 

பெப்ரல் அமைப்பினால் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு இவ்விடயம் தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஏப்ரல் 28 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்கான இறுதி தினமாகும் என்று அறிவித்துள்ளது. 

தற்போது நாட்டில் காணப்படுகின்ற நெருக்கடியான நிலைமைக்கு அமைய ஏப்ரல் 28 ஆம் திகதியாகும் போது தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வது மிகவும் ஆபத்தானதாகும் என்பது எமது நிலைப்பாடாகும். 

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் அதிகாரிகள் பலரால் பறிமாற்றிக் கொள்ளப்படுகின்றன. இவர்களில் ஒருவர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவராகக் காணப்பட்டால் கூட அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். 

இதேவேளை நாட்டில் தற்போது காணப்படுகின்ற ஆபத்தான நிலைமையில் திங்கட்கிழமை அனைத்து அரச திணைக்களங்களும் வழமை போன்று இயங்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அதனால் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை கையளிப்பது அரச அதிகாரிகளுக்கு சிக்கலாக அமையும். 

இந்த காரணிகள் பற்றி ஆராய்ந்து தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை கையளிப்பது தொடர்பில் உரிய பாதுகாப்பான தீர்மானத்தை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

No comments:

Post a Comment