மினுவாங்கொடை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி போலியானது என, மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொய்யான செய்தியொன்று, இப்பிரதேசத்தில் பரப்பப்பட்டு வருகின்றது.
மினுவாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரொஹான் மஹேஷின் அறிவுறுத்தலுக்கமைய இது பொய்யான செய்தியென்றும், இவ்வாறான வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாமென்றும், இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டதாக இதுவரை எவரும் அடையாளப்படுத்தப்படவில்லையென்றும் மினுவாங்கொடை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மினுவாங்கொடையில் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது அவதானம் செலுத்தப்படும். இவ்வாறு வதந்திகளைப் பரப்புபவர்கள் மீதும், ஊரடங்கு விதிகளை மீறுகின்றவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அந்த அறிவுறுத்தல்களில், நாங்கள் எதிர்பார்ப்பது பொதுமக்கள் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதாகும். இதனால், பொதுமக்கள் ஊரடங்கு வேலையில் நடமாடுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும்போதும் அதற்கான பொறிமுறைகளுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும். ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமானால், பொலிஸார் மூலம் சட்ட ரீதியாக அணுகவேண்டும்.
ஆனால், தற்போது எமது பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது வதந்திகளைப் பரப்பி குளிர்காய சிலர் முயல்கின்றனர். இதிலிருந்தும் பொதுமக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment