எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித்திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.எஸ்.எம்.வசீம், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.எம்.நஜீப்கான், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் ரி.ஹரிபிரதாப், வாழைச்சேனை பொலிஸார், பொதுச்சுகாதார மேற்பார்வை பரிசோதகர்கள், வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக முகாமையாளர், மீனவர் சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, வெளி மாவட்டத்திற்கு மீன் கொண்டு செல்லும் நபர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டு, பின்னர் திரும்பும் பட்சத்தில் பதினான்கு நாட்கள் சுய தனிமைப்படுத்தில் இருக்க வேண்டும். அத்தோடு, வேறு மாவட்டத்தினர் யாரையும் வாகனத்தில் ஏற்றி வரக்கூடாது.
வெளி மாவட்டங்களிலிருந்து மீன் கொள்வனவிற்கு வரும் வாகனங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பிரதேசத்தினைக் காப்பாற்றும் நோக்கில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் ஆழ்கடலுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, சிறு படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மாத்திரம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விசேட கலந்துரையாடலில் மேற்படி விடயங்கள் தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment