திடீரென நிரந்தரமாக மூடப்பட்ட களுவாஞ்சிக்குடி சதொச நிலையம் - இது எமதுக்குச் செய்யும் துரோகம் மக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

திடீரென நிரந்தரமாக மூடப்பட்ட களுவாஞ்சிக்குடி சதொச நிலையம் - இது எமதுக்குச் செய்யும் துரோகம் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இயங்கி வந்த அரசாங்க சதொச பல்பொருள் விற்பனை நிலையம் இன்று (04) திடீரென நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பிரதேச மக்களின் வேண்டுகோளிற்கிணங்க கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த சதொச நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதனால் பட்டிருப்புத் தொகுதியின் மக்கள் பலத்த நன்மைகளை அனுபவித்து வந்துள்ளனர். 

தற்போது இந்நிலையம் திடீரென இது நிரந்தரமாக மூடப்பட்டு, லொறியில் அங்கிருந்த பொருட்கள் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமது மேலதிகாரிகளின் உத்தரவுக்கமைய பொருட்களை ஏற்றியனுப்புவதாக அந்நிலையத்தின் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
சதொச நிலையம் மூடப்படுவதாக அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இது எமதுக்குச் செய்யும் துரோகமாகும் என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இவ்விடயம் அறிந்த மண்முனை தென் எருவில் பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ஆகியோர் இஸ்த்தலத்திற்கு உடன் விஜயம் செய்து நிலமையினைக் கேட்டறிந்து கொண்டனர்.

பட்டிருப்புத் தொகுதி மக்களின் வரப்பிரசாதமாக இருந்து வந்த சதொச நிலையம் இந்த இக்கட்டான காலகட்டத்தில், தீடீரென மூடப்படுவதானது மிகவும் துரதிஸ்ட்டவசமானது. இதனை அரசாங்கம் உடன நிறுத்த வேண்டும். அரச சலுகைகளை எமது பகுதி மக்களும் அனுபவிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இவ்விடையம் குறித்த அரசாங்க அதிபர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர், ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர் பஸீல் ராஜபச்ஸ அகியோருக்கு தொலைபேசி மூலம் இவ்விடையத்தை அறிவிப்பதற்கு தாம் முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.
எனினும் மக்களுக்கு அரச சலுகைகளை அனுபவிக்கும் வர்த்தக நிலையத்தை தீடீரென மூடப்படுவது குறித்து தாம் தமது கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாக மண்முனை தென் எருவில் பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ், தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மற்றும் கொரோனா வைரஸ் பிரச்சனைகளுக்கு முன்னர் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, ஏறாவூர், காத்தான்குடி, உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சதொச நிலையங்கள் மூடப்படுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. 

ஆனாலும் எமது ஏனைய செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கும், என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார்.

(பெரியபோரதீவு  நிருபர் - வ. சக்திவேல்)

No comments:

Post a Comment