கொழும்பில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர், யுவதிகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜனகன் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

கொழும்பில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர், யுவதிகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜனகன்

மலையகத்திலிருந்து வந்து, கொழும்பில் தொழில் நிமிர்த்தமாகத் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் நிர்க்கதி நிலையில் இருக்கின்றனர். ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமையால், கொழும்பில் தங்கியிருக்கும் மலையக இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கான உடனடி நிவாரணத்தை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி.ஜனகன், வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இவ்விவகாரம் தொடர்பில், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பில் பணி நிமிர்த்தமாகத் தங்கியுள்ள மலையகத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் பலர் என்னிடமும் தலைவர் மனோ கணேசனிடமும் தொடர்ந்தும் உதவிகளைக் கேட்டு வருகிறார்கள். 

தலைவர் மனோ கணேசனின் ஆலோசனைப்படி, ஜனனம் அறக்கட்டளையூடாக சில உதவிகளைச் செய்து வருகின்றோம். ஆனாலும், அவை போதுமானதாக இல்லை. 

கொழும்பில் தங்கியுள்ள பல இளைஞர், யுவதிகள் உணவுக்காக கஷ்டப்படுகின்றனர். அவர்களது உணவுத் தேவையை ஓரளவுதான் எங்களால் பூர்த்தி செய்ய முடிகிறது. நிலைமை நீடிக்குமாக இருந்தால், அந்த இளைஞர், யுவதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவர். ஆகையால், இவர்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அக்கறையெடுக்க வேண்டும். 

அதுமாத்திரமன்றி, கொரோனா வைரஸ் தொற்று நிலை மூன்றாம் கட்டத்தை அடைந்துள்ளது. இத்தகைய நிலையில் கொழும்பு போன்ற ஆபத்தான வலயத்துக்குள் மலையக இளைஞர், யுவதிகள் சிக்கியிருப்பது ஏற்புடையதல்ல. 

எனவேதான், கொழும்பில் நிர்க்கதியாகியிருக்கும் மலையக சொந்தங்களை தத்தமது ஊர்களுக்கு, பாதுகாப்பாக அனுப்புவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தும்படியும் அரசாங்கத்தைக் கோருகின்றோம். 

ஊர்களுக்குச் செல்லும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படுமாக இருந்தால், பாதுகாப்பான முறையில் அனுப்புவதற்கான நடவடிக்கை எடுப்பதோடு, சுயதனிமைப்படுத்தலை உறுதிப்படுத்துவதோடு, கண்காணிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள அரசாங்கம் உறுதிபூண வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment