கொரோனா தொற்றினால் மரணிப்பவர் தொடர்பில் மகஜர் கையளிப்பு - பைஸர் முஸ்தபா ரிஸ்வி முப்தியிடம் கையளித்தார் - எரிப்பதில் மருத்துவ அதிகாரிகள் சங்கமே பூரண ஒத்துழைப்பு வழங்குகிறது - News View

Breaking

Post Top Ad

Thursday, April 2, 2020

கொரோனா தொற்றினால் மரணிப்பவர் தொடர்பில் மகஜர் கையளிப்பு - பைஸர் முஸ்தபா ரிஸ்வி முப்தியிடம் கையளித்தார் - எரிப்பதில் மருத்துவ அதிகாரிகள் சங்கமே பூரண ஒத்துழைப்பு வழங்குகிறது

(ஐ.ஏ. காதிர் கான்)

கொரோனா தொற்று காரணமாக முஸ்லிம் ஒருவர் மரணித்தால், அவரின் இறுதிக் கிரியைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பிலான புதிய சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட வரைவை, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்கு ரிஸ்வி முப்தியிடம் கையளித்தார். 

இது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று, (01) புதன்கிழமை காலை, அஷ்ஷெய்கு ரிஸ்வி முப்தியின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போதே, இச்சட்ட வரைவு கையளிக்கப்பட்டது. இது அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இக்கலந்துரையாடலில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள், முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும், தனக்கு ஊடக சந்திப்பொன்று இருப்பதாகக் கூறி, அவர் இதில் பங்கேற்கவில்லை.

இங்கு ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா கருத்துத் தெரிவிக்கும்போது, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை குறித்து நான் கவலையடைந்தேன். 

தொற்று நோய்க்கு இனம், மதம், பேதம் தெரியாது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது, பாரியளவில் வியாபித்து பரவி வரும் தொற்று நோய் என்றாலும், சமய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். WHO இன் அறிக்கையின் பிரகாரம், எட்டு அடி ஆழத்தில் உடலை முறைப்படி புதைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குடும்பத்தவர்களின் உணர்வுகளையும், வேண்டுகோளையும் கருத்திற்கொள்ளாது, குறித்த ஜனாஸாவை எரிப்பதில் அவசரம் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டுக்கு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமே பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிகின்றது. 

அனைத்து மக்களும் அவர்களின் சமய ரீதியிலான உரிமைகளை வலியுறுத்தும் அதேவேளையில், இவ்வாறான மரணங்கள் இனிமேல் இடம்பெற்றால் அவர் அவர் மத ரீதியாக நல்லடக்கம் செய்ய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவேதான், புதிய சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

அஷ்ஷெய்கு ரிஸ்வி முப்தி இங்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார். கொரோனா தொற்றின் மூலம் முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரைக் குளிப்பாட்டுவது, கபன் செய்வது, தொழுகை நடாத்துவது மற்றும் அடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது பர்ளு கிபாயாவாகும். பர்ளு கிபாயா என்பது, இவற்றை முஸ்லிம்களில் சிலர் நிறைவேற்றி விட்டால் போதுமானது. அவ்வாறு யாரும், அக்கடமைகளை நிறைவேற்றாவிட்டால், முஸ்லிம்கள் அனைவரும் பாவிகளாக ஆகிவிடுவார்கள்.

இவ்வடிப்படையில், கொரோனா தொற்று தாக்கி மரணித்த ஒருவரது உடலிலிருந்து மற்றவர்களுக்கு இத்தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதால், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல் முற்று முழுதாக பையினால் மூடப்படும். எனவே, அதைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில், மேற்கூறப்பட்ட இரண்டாவது கருத்தின் அடிப்படையில், கொரோனா தொற்று தாக்கி மரணிக்கும் ஜனாஸாவைக் குளிப்பாட்ட முடியாது போனாலும், அதற்காக ஜனாஸாத் தொழுகையை நடாத்தி அடக்கம் செய்வது அவசியமாகும்.

மரணித்தவரின் உடலைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாது என்பதால், தொழுகை மாத்திரம் நடாத்தி அரச அதிகாரிகளின் அறிவுரைகளுடன், அதிக நபர்கள் ஒன்று சேராமல், முக்கிய சிலர் மாத்திரம் ஒன்று சேர்ந்து ஜனாஸா தொழுகை மற்றும் அடக்கும் பணிகளில் ஈடுபடுதல் வேண்டும். இதுவே மார்க்க சட்ட திட்டமாகும். எனவேதான், இது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய அரசாங்கத்திடம் புதிய சட்ட வரைவைக் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad