எங்கள் நாட்டில் ஒருவருக்குமே கொரோனா வைரஸ் கிடையாது! - உண்மையை மறைக்கிறதா வட கொரியா? - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

எங்கள் நாட்டில் ஒருவருக்குமே கொரோனா வைரஸ் கிடையாது! - உண்மையை மறைக்கிறதா வட கொரியா?

கொரோனா காரணமாக இதுவரை தங்கள் நாட்டில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று வட கொரியா தெரிவித்துள்ளது. உலக நாடுகளை இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் பலருக்கு இது சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.

உலகமே கொரோனாவினால் திணறிக் கொண்டு இருக்கும் போது வட கொரியா மட்டும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் யாருக்கும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. 

'எங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை. இதுவரை கொரோனா அறிகுறியோடு யாரும் அனுமதி ஆகவில்லை. அதேபோல் கொரோனா நோயாளிகள் யாரும் வெளிநாட்டில் இருந்து எங்கள் நாட்டிற்குள் வரவில்லை' என்று வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவில் இப்படி கொரோனா இல்லாமல் இருக்க நிறைய காரணங்கள் உள்ளன. அங்கு கொரோனாவிற்கு எதிராக வட கொரியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

ஜனவரி 5 ஆம் திகதியே வட கொரியா தங்கள் எல்லைகளை மூடி விட்டது. அத்தோடு தங்கள் நாட்டில் இருந்து யாரும் வெளியேறக் கூடாது என்று உத்தரவிட்டது. சீனாவுடன் மொத்தமாக ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திக் கொண்டது. அதேபோல் வெளிநாட்டு வாழ் மக்கள் தங்கள் நாட்டில் இருந்தால் அவர்களை உடனே வெளியேற்றியது.

டிசம்பருக்கு பின்னர் தங்கள் நாட்டிற்குள் வந்த எல்லோரையும் வட கொரியா வெளியேற்றியது. எல்லையில் கள்ளத்தனமாக நாட்டிற்குள் நுழையும் எல்லோரையும் கண்டுபிடித்து மொத்தமாக எல்லைகளை சீல் வைத்தது. மிக தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் அந்நாட்டு அரசு, மொத்தமாக தனி நாடாக, தங்களை தனியாக வைத்துக் கொண்டது. கொரோனா வைரஸ் வட கொரியாவில் பரவாமல் இருக்க இதுதான் காரணம் என்று கூறுகிறார்கள். 

வட கொரியா இப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இன்னொரு காரணமும் இருக்கிறது. தொடர் பொருளாதாரத் தடை மற்றும் அமெரிக்காவுடனான முறுகல் காரணமாக வட கொரியா மருத்துவத் துறையில் முன்னேற்றம் அடையவே இல்லை. அங்கு போதிய மருந்துகள், மருத்துவர்கள் இல்லை. கொரோனா வந்தால் அங்கே தப்பிப்பது கஷ்டம். இதனால்தான் அங்கே கொரோனாவை நுழைய விடாமல் வட கொரியா தீவிரமாக முயன்று வருகிறது. 

அமெரிக்கா விதித்த மருந்து ஏற்றுமதிக்கான பொருளாதாரத் தடைகள் இன்னும் இருக்கின்றன. அங்கு மருந்துகள் இன்னும் ஏற்றுமதி செய்யப்படுவது இல்லை. உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது இங்கே மருந்துகளை அனுப்பும். மற்ற எல்லாம் மருந்தும் உள்நாட்டு உற்பத்திதான். இதனால் தற்போது அங்கு எல்லையிலேயே கொரோனாவை நுழைய விடாமல் தீவிரமாக அந்நாட்டு அரசு கட்டுப்படுத்தி வருகிறது.

அருகிலேயே இருக்கும் சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் கொரோனாவால் 9,478 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4811 பேர் அங்கு குணமாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 144 பேர் அங்கு பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எதிராக போராட்டத்தில் தென் கொரியா கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்று வருகிறது. தென் கொரியா வரை கொரோனா வந்தாலும் கூட வட கொரியா இதனால் பாதிப்பு அடையவில்லை. 

உலகமே கொரோனாவால் பதறி வரும் போது வட கொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் எப்போதும் போல ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறார். அங்கு கடந்த வாரம் கூட இரண்டு ஏவுகணை சோதனை நடந்தது. 300 கி.மீ மற்றும் 250 கி.மீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்து வெற்றி பெற்றது. உலக நாடுகளை இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதேசமயம் பலருக்கு இது சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது. தங்கள் நாட்டில் கொரோனா வந்தும் கூட வட கொரியா இதை மறைக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

வட கொரியாவில் ஏற்கனவே 250 பேர் பலியாகி விட்டனர். இதில் இராணுவ வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர் என்று அந்நாட்டு ஊடங்கங்கள் சில தெரிவித்து வருகின்றன. 

அதேபோல் அங்கு 10 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தூதரக அதிகாரிகள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வட கொரியாவின் கொரோனா உள்ளது என்றும் சிலர் அங்கே எழுதி வருகிறார்கள். 

No comments:

Post a Comment