மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - இராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - இராதாகிருஷ்ணன்

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் பற்றி கலந்தாலோசிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நாளை காலை 11 மணியளவில் சர்வ கட்சி தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமையால் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார். 

இக்கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பிரதான கட்சிகளினதும் ஏனைய அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். 

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாத்திரமின்றி சுகாதாரத்துறை அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கலந்தாலோசிக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரப்பட்டு வந்த நிலையில் மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது. 

இதன் போது நாட்டின் நிலைமையைக் கருத்திக் கொண்டு பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அத்தோடு வீட்டிலிருப்பவர்களுக்கு மருந்துவ சேவையினைப் பெற்றுக் கொடுத்தல், நாளாந்த சம்பளத்திற்கு வேலை செய்பவர்களுக்கான நிவாரணங்கள், தேயிலை உள்ளிட்ட பெருந்தோட்ட துறைகளில் தொழில் செய்பவர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முகங்கொடுத்துள்ள சவால்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. 

அதற்கமைய நாளை இடம்பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான முன்னெடுப்புகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment