இரண்டாயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் 9 பாகிஸ்தானிய கடத்தல்கார்களுடன் சிக்கிய படகு : விசாரணையில் வெளியான தகவல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

இரண்டாயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் 9 பாகிஸ்தானிய கடத்தல்கார்களுடன் சிக்கிய படகு : விசாரணையில் வெளியான தகவல்

(எம்.எப்.எம்.பஸீர்) 

இலங்கை கடற்படையினரால் தென் ஆழ்கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி சுமார் 2000 கோடி ரூபாவையும் விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போதைப் பொருளானது பாக்கிஸ்தனிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி, அங்குள்ள கடத்தல்காரர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது என சந்தேகிக்கத்தக்க பல தகவல்களை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர். 

கரையில் இருந்து 835 கிலோ மீற்றர் தூரத்தில் ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களும், அதனை கடத்திய ஈரானிய படகும், அதில் பயணித்த 9 பாக்கிஸ்தான் கடத்தல்காரர்களும் திக்கோவிட்ட துறைமுகத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்டு பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டனர். 

எனினும் போதைப் பொருட்களும் வழங்குப் பொருட்கள் தடையங்களும் பொலிஸாரால் நேற்று பொறுப்பேற்கப்பட்ட நிலையில், 9 பாக்கிஸ்தான் சந்தேக நபர்களும், கொரோனா தொடர்பில் கடற்படையினரின் நேரடி கட்டுப்பாட்டில் தங்காலையில் தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தடுத்து வைத்து தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
அத்துடன் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையின் சயுர நடவடிக்கை கப்பலின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட அனைத்து கடற்படையினரும் 14 நாட்களுக்கு விஷேட தனிமைப்படுத்தல் தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார். 

கடந்த இரு வாரங்களுக்கு முன்பிருத்தே கடற்படைக்கு கிடைக்கப் பெற்ற உளவுத் தகவல் ஒன்றினை மையப்படுத்தி, சர்வதேச நிறுவனம் ஒன்றினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட செய்மதி புகைப்படங்களின் உதவியோடு கடற்படையின் சயுர கப்பல் தென் கடலில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது. 

இந்நிலையிலேயே சந்தேகத்திற்கு இடமான குறித்த ஈரானிய படகு, கொடிகள் எதுவுமின்றி இருந்த போது, சயுர கப்பலின் கட்டளை அதிகாரியின் உத்தரவுக்கு அமைய சுற்றி வளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 
இதன்போதே, அங்கு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஐஸ் எனப்படும் மெதம்பிட்டமைன் போதைப் பொருள் 605 கிலோவும், இதற்கு முன்னர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டிராத கெட்டமைன் எனப்படும் ஒருவகை புதிய போதைப் பொருள் 579 கிலோ கிராமும் மேலும் பாபுல், அடையாளம் காணப்படாத போதை மாத்திரைகள் 100 கிராமும் கைப்பற்றப்பட்டிருந்தன. 

நேற்று இவை அனைத்தும் திக்கோவிட்ட துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்ட நிலையில், பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் பியல் டி சில்வா, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்த உள்ளிட்டோர் அங்கு சென்றிருந்தனர். 

இந்நிலையிலேயே இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பியல் டி சில்வா, இப்போதைப் பொருட்களில் ஒரு பகுதி இலங்கைக்குள் கடத்தும் நோக்கமும் ஏனையவை வெளிநாடொன்றின் கடத்தல்காரர் ஒருவருக்கு வழங்கப்படும் நோக்கிலும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டார். 
எனினும் பொலிஸ் விசாரணைகளின் ஆரம்பக்கட்ட தகவல்களின் பிரகாரம், இது ஆஸி. நோக்கி கடத்தப்பட்ட போதைப் பொருள் என சந்தேகிக்கத்தக்க பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

கடந்த 2019 ஆம் ஆண்டு கடற்படையினரால் கடலில் வைத்து 3653 கிலோ கஞ்சாவும், 762 கிலோ ஹெரோயினும், 3 கிலோ ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்ப்ட்டிருந்தன. இவ்வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் மட்டும் 2339 கேரள கஞ்சாவும், 438 கிலோ ஹெரோயின், 739 கிலோ ஐஸ், 579 கிலோ கெட்டமைன் அகிய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment