கொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

கொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய கலந்துரையாடல் திருப்தியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முஸ்லிம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02) சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எச்.எம். பௌஸியின் இல்லத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடினார்கள். இதன்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதுபற்றி பிரதமருடன் பேசுவதற்கு இணக்கம் காணப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (02) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தரப்பில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, அலிசாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்யக் கோரும்போது சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பதால், பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இதுவிடயமாக தனிப்பட்ட ரீதியில் பேசுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைவரின் மத்தியிலும் பகிரங்கமாக பேசுவதற்கே பிரதமர் இணங்கியுள்ளார்.

இதற்கமைய முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கொவிட்-19 தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு நியாயபூர்வமான காரணங்களை ஆதாரங்களுடன் விளக்கிக் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல், யுனஸ்கோ நிறுவனத்தின் நியதி என்பவற்றில் காணப்படும் முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி, இத்தகைய தொற்று நோயினால் இறப்பவர்களை எரிக்காமல், அதற்கு மாற்றீடாக அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவ ரீதியாக மட்டுமல்லாது மக்களின் சமய ரீதியான உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்வதன் அவசியம் பற்றி அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றையும் அவர் காண்பித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தீர்மானத்துக்கமைய, இறந்தவரின் உடலை குறிப்பிட்ட ஆழத்தில் உரிய நிபந்தனைகளுக்கு அமைவாக அடக்கம் செய்யலாம். வழங்கப்பட்ட அறிவுறுத்தலில் சடலம் அவசர அவசரமாக அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. புதைப்பதன் ஊடாக இறந்தவரின் உடலிலிருந்து அவ்வாறான கிருமிகள் பரவும் என குறிப்பிடப்படவில்லை போன்ற விடயங்களையும் ரவூப் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

அரசாங்கம் முதலில் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில், நீர்கொழும்பில் இரண்டாவது மரணம் நிகழ்ந்த பின்னர், மரணமடைந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்ட சுற்றறிக்கைக்கு ரவூப் ஹக்கீம் இதன்போது விசனம் வெளியிட்டுள்ளார்.

கூட்டத்தில் பிரசன்னமாயிருந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க இதன்போது எதிர்க் கருத்துகளை தெரிவித்துள்ளார். உடலை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் மாசடையும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் சார்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆளும் தரப்பைச் சேர்ந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரும் முஸ்லிம் தரப்பின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்புக் காட்டியுள்ளனர். ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்தால், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் ரவூப் ஹக்கீம் ஆதாரங்களுடன் முன்வைத்த கோரிக்கைகளுக்கு துரதிஷ்டவசமாக சாதகமான பதில்கள் எவையும் கிடைக்கவில்லை.

முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆகியோர் இதுபற்றி விரிவாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் மீளாய்வு செய்வதற்கு மருத்துவ துறைகளை சார்ந்த நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானத்துறை நிபுணர்கள் ஆகியோர் உள்ளடங்கிய குழுவொன்றை அவசரமாக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதுகுறித்து யோசிப்போம் என பிரதமர் கூறியுள்ளார்.

ஊடகப் பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

1 comment:

  1. Drong approach , good results may come out if the request is tabled by Leader of National Congress Adaullah ,Mr Ali Sabri ect...

    ReplyDelete